போராட்டங்கள் ஆக்கபூர்வமானதாகவும் நியாயப்படுத்தக் கூடியதாகவும் அமைய வேண்டும்!

Report Print Rusath in சமூகம்

எதிர்கால சந்ததியினரின் வழிகாட்டிகளான ஆசிரியர் சமூகத்தின் அத்தனை நடவடிக்கைகளும் போராட்டங்களும் ஆக்கபூர்வமானதாகவும், அடுத்தவர்களால் நியாயப்படுத்தக் கூடியதாகவும் அமைய வேண்டும் என கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவக்கொழுந்து ஜெயராசா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டின் எதிர்கால சந்ததியினரான பல இலட்சம் மாணவர்களுக்கு முன்னாலுள்ள ஆசிரியர் சமூகத்தின் அத்தனை நடவடிக்கைகளும், முன்னுதாரணமாகவும், வழிகாட்டலாகவும் அமைய வேண்டும்.

அதேவேளை, ஆசிரியர் சமூகம் தனக்கான உரிமைகளைக் கோரிப் போராடும் பொழுதும் அந்தப் போராட்டங்கள் ஆக்கபூர்வமானதாகவும், கண்ணியமானதாகவும் அடுத்தவரால் மறுக்க முடியாமல் நியாயப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

சமீபத்திய மூன்றம்சக் கோரிக்கைப் போராட்டமும் அந்தக் கண்ணோட்டத்தில் நோக்கப்பட வேண்டிதொன்றேயாகும்.

ஏற்கெனவே தொழிற் சங்கங்கள் முன்னெடுத்த போராட்டங்கள், கோரிக்கைகளின் பயனாக ஆசிரியர்களுக்கான புறம்பான சம்பள உயர்வு பற்றிய அறிக்கை ஜனாதிபதியினதும் பிரதமரினதும் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அக்கோரிக்கைகள் சம்பள உயர்வுக்கான பரிசீலனையில் உள்ளன.

இதைவிட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான பொதுவான சம்பள உயர்விலும் ஆசிரியர்கள் உரித்துடையவர்களாக உள்ளார்கள்.

எனவே, இந்த விடயத்தில் அவசரப்பட்டு கறுப்புப் பட்டியணிய வேண்டிய நியாயப்படுத்தல் தேவையற்றதொன்றாகும்.

மேலும், மற்ற அரசாங்க ஊழியர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது ஆசிரியர்கள் வேலைப்பளுவினால் திண்டாடுகின்றார்கள் என்பதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

ஒட்டு மொத்த வருட நாட்களில் தவணை விடுமுறைகள், பரீட்சைக் காலங்களுக்கான விடுமுறைகள், மற்றுமுள்ள பொது விடுமுறைகள், ஆசிரியர் பணிக்கான நேரம் என்பனவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் வருடத்தின் முழுநாட்களாக கணக்கிடுகையில் சுமார் 85 நாட்களே ஆசிரியர்கள் பணிபுரிய நேரிடுகிறது. இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு கருமமாற்ற வேண்டும்.

அதேவேளை அதிபர் ஆசியர்களுக்குப் பாதுகாப்பில்லை என்று கூறுவது புரியாத புதிராகவே உள்ளது.

எனவே, எதிர்கால சந்ததியினரின் முன்னுதாரணமான ஆசிரியர் சமூகம் அரசியல் மற்றும் இன்னபிற நலன்களுக்காக பிழையாக வழி நடாத்தவும் தவறாக வழி நடாத்தப்படவும் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.

அதனால்தான் சமீபத்திய ஆசிரியர் அதிபர் போராட்டத்திற்கு கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம் எதிர்ப்புமின்றி ஆதரவுமின்றி மௌனம் காத்தது.