பக்கத்து வீட்டு நபரின் உடலில்13 முறை கத்திக் குத்து: மரண தண்டனை கொடுத்து தீர்ப்பளித்தது நீதிமன்றம்

Report Print Steephen Steephen in சமூகம்

காணி பிரச்சினையில் அயல் வீட்டு நபரை கத்தியால் குத்தி கொலை செய்த இரண்டு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

காணி தகராறில் அயல் வீட்டு வாசியின் உடலில் 13 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்த இந்த குற்றவாளிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலக்கரட்ன இந்த மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த குற்றவாளிகள், ஒன்பது வருடங்களுக்கு முன்னர் களனி வராகொடவத்தை பகுதியில் தனது வீட்டில் இரவு உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்த அயல் வீட்டு வாசியை தாக்கி, அவரை வீட்டுக்கு எதிரில் கொண்டு சென்று கத்தியால் கொலை செய்துள்ளனர்.

2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் திகதி நடந்த இந்த கொலை சம்பவம் தொடர்பாக களனி வராகொடவத்தை பகுதியை சேர்ந்த 55 வயதான சுதேஷ் ரஞ்சித் பிரியதர்ஷன, 63 வயதான தர்மசிறி விஜேரத்ன ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.

டப்ளியூ.ஜே. தர்மசிறி ஜயசிங்க என்ற நபரையே இவர்கள் கொலை செய்திருந்தனர்.

வழக்கில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட நபர்களில் மனைவி, பிள்ளைகள் உட்பட 8 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஆறு பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்பதால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.