மன்னார் வீட்டுத் திட்டத்தில் மோசடி

Report Print Ashik in சமூகம்

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்படுகின்ற வீட்டுத் திட்டங்களுக்கு உரித்தான காணிகள் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.

தேசிய வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் பணிப்புரைக்கு அமைவாக மாவட்டம் தோறும் அமுல் படுத்தப்பட்டு வரும் 'மாதிரிக்கிராமம்' மற்றும் கொத்தணிக் கிராமங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த முதலாம் திகதி மன்னாரிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மன்னார் மாவட்ட முகாமையாளர் ஜே.நோயல் ஜெயச்சந்திரன் தலைமையில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் மாதிரிக் கிராமம் மற்றும் கொத்தணிக் கிராமங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்றது.

பிரதேச செயலகங்களினூடாக பெற்றுக் கொள்ளப்பட்ட பயணாளிகளுக்கு அமைவாகவே குறித்த வீட்டுத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

அதற்கமைவாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பத்திமா கிராமத்தில் 45 வீடுகளும், ஜிம்றோன் நகர் வலயம் 01 இல் 50 வீடுகளும், ஜிம்றோன் நகர் வலயம் 02 இல் 50 வீடுகளும், ஜிம்றோன் நகர் வலயம் 03 இல் 45 வீடுகளும் , ஜிம்றோன் நகர் வலயம் 04 இல் 45 வீடுகளும், கீரி வள்ளுவர் வீதி கிராமத்தில் 15 வீடுகளும், கீரி விவேகனாந்தர் வீதி கிராமத்தில் 22 வீடுகளும், சின்னக்கடையில் 15 வீடுகளும், மூர்வீதியில் 16 வீடுகளும், தாழ்வுபாட்டில் 12 வீடுகளும், தோட்ட வெளியில் 25 வீடுகளும், அம்பாள்புரத்தில் 37 வீடுகளும் மொத்தமாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் 377 வீடுகள் அமைக்கப்படவுள்ள நிலையில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வீடுகளுக்கான அடிக்கல் வைபவ ரீதியாக நாட்டி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட சில கிராமங்களில் வீட்டுத் திட்டத்திற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ள போதும், குறித்த சில காணிகள் பிறிதொருவரின் ஆட்சியில் உள்ள போதும் மன்னார் பிரதேச செயலகத்தின் காணி அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கையின் காரணமாக விரும்பிய நபர்களுக்கு வீடு அமைக்க வழங்கப்பட்டுள்ளதாக பாதீக்கப்பட்டவர்கள் முறையிட்டுள்ளனர்.

குறித்த முறைப்பாட்டை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மன்னார் மாவட்ட முகாமையாளர் ஜே.நோயல் ஜெயச்சந்திரன் உறுதிப்படுத்தியுள்ளதோடு, தனக்கும் முறைப்பாட்டுக் கடிதம் பாதிக்கப்பட்டவர்களினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மன்னார் பிரதேச செயலகத்தின் காணிப்பிரிவுக்கு பொறுப்பான சில அதிகாரிகள் குறித்த சம்பவத்துடன் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்தோடு, நீண்ட காலமாக அரச காணிகளில் வாழ்ந்து வந்த சில மக்களின் காணிகளை குறித்த ஆண், பெண் அதிகாரிகள் தமக்கு வேண்டியவர்களுக்கு அபகரித்துக் கொடுத்து தேசிய வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் பணிப்புரைக்கு அமைவாக மாவட்டம் தோறும் அமுல் படுத்தப்பட்டு வரும் 'மாதிரிக்கிராமம்' மற்றும் கொத்தணிக் கிராம வீட்டுத்திட்டத்தை பெற்றுக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட மக்களின் முறைப்பாடு தொடர்பாக மன்னார் பிரதேச செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்பு அவர்களை தொடர்பு கொண்டு வினவிய பொது,

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் காணி இல்லாத மக்களுக்கே காணிகள் வழங்கப்பட்டு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

அரச காணிகளை பிடித்து வைத்துக் கொண்டு சொந்தமாக மாடி வீடு கட்டி உள்ளவர்களுக்கு காணி மற்றும் வீட்டுத்திட்டம் வழங்க முடியாது.

அப்படிப்பட்டவர்களிடம் உள்ள காணிகள் பறிக்கப்பட்டு காணி இல்லாதவர்களுக்கு குறித்த திட்டம் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.