சிங்கள அரசால் நியமிக்கப்படும் ஆளுநரிடம் மகஜரை கையளித்திருப்பது பிழையானது!

Report Print Theesan in சமூகம்

சிங்கள அரசால் நியமிக்கப்படும் ஆளுநரிடம் மகஜரை கையளித்திருப்பது பிழையானது மற்றும் பாரதூரமானது காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 754 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபடும் காணாமல் ஆக்கபட்ட உறவினர்கள் இன்றைய தினம் நடாத்திய ஊடாக சந்திப்பிலேயே மேற்படி தெரிவித்தனர்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கபட்ட உறவுகள் வடக்கு ஆளுநரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். சிங்கள அரசால் நியமிக்கபடும் ஆளுநரிடம் மகஜரை கையளித்திருப்பது பிழையானதுடன், பாரதூரமானது.

இங்கிருந்து பலர் ஜெனிவா சென்றுள்ள நிலையில் ஆளுநரிடம் மகஜரை கொடுக்க வேண்டிய தேவை என்ன. இவர்கள் போராட்டங்களை செய்யும் போது மாத்திரம் சர்வதேசமே தீர்வை தரவேண்டும் என்று சொல்லிவிட்டு மகஜர்களை ஆளுநரிடமும், மாவட்ட செயலகங்களிலும் வழங்குகின்றனர்.

ஆனால் நாம் இரண்டு வருடங்களாக எமது நிலைப்பாட்டை மாற்றாது வெளிநாடு தான் எமக்கு தீர்வை பெற்று தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

இன்றுடன் 754 நாளாக நாம் தொடர்ந்து போராடி வருகின்றோம். போராட்டத்தில் ஒருநாள் கூட கலந்து கொள்ளாத இவர்கள் தெருவோரத்தில் இருப்பதாக பொய் கூறுகின்றார்கள்.

எமது போராட்டத்தை உதாசினபடுத்த வேண்டாம் என்பதை அவர்களிடம் கேட்டு கொள்கின்றோம். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

காணாமல் போனோர் விடயங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை அமர்வில் இதுவரை பெரிதாக பேசப்படவில்லை. எனினும் இனிவரும் அமர்வுகளில் அந்த விடயம் முக்கியம் பெறும் என எதிர்பார்கின்றோம்.

வரவுசெலவு திட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஆறாயிரம் ரூபாய் ஒதுக்கபட்டுள்ளது அதனை நாம் நிராகரிக்கின்றோம். 300 கோடி ரூபாய் வீடும் விலை மதிப்பான காரும் வாங்கியுள்ள சம்மந்தனுக்கு எமது மக்கள் படும் வேதனை தெரியாது எனவே தேர்தலின் போது இவை பிரதிபலிக்கும்.

தற்போது தமிழரின் விடயத்தை ஆளுநர் கதைக்க வேண்டாம் என சுமந்திரன் கூறுகின்றார். எனவே பிரதமரின் முகவரும், ஐனாபதியின் முகவரும் சண்டை பிடிக்கும் நிலையே தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.