இடைநிறுத்தப்பட்ட ஊழியர்களை மீண்டும் சேவைக்கமர்த்த ஆதரவு

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

இடைநிறுத்தப்பட்ட ஆறு பதிலீட்டு அடிப்படையிலான ஊழியர்களையும் மீண்டும் சேவைக்கு அமர்த்த அனைத்து உறுப்பினர்களும் ஏகமானதாக ஆதரவளித்துள்ளனர்.

காரைதீவு பிரதேச சபையின் விசேட அமர்வு இன்று இடம்பெற்றுள்ளது.இதன்போதே குறித்த ஆதரவு அழிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற 12 ஆவது மாதாந்த அமர்வில் 3 வருடங்களாக பதிலீட்டு அடிப்படையில் பணியாற்றும் ஆறு ஊழியர்களின் சேவையை மேலும் ஆறு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணையை 5 உறுப்பினர்கள் எதிர்த்த காரணத்தினால் அவர்கள் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு மீளத்தொழில் வழங்க வேண்டும்.என தவிசாளரிடம் எழுத்துமூல கடிதம் சமர்ப்பிக்கப்பட்டதினை தொடர்ந்து குறித்த அமர்வு இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது இடைநிறுத்தப்பட்ட 6 ஊழியர்களையும் மீள பணிக்கமர்த்துவது தொடர்பில் உறுப்பினர்களின் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

குறித்த அமர்வின் முடிவில் வாக்களிப்பிற்கு விடப்பட்டபோது அனைவரும் குறித்த ஊழியர்களை மீளவும் சேவைக்கமர்த்த வேண்டுமென ஆதரவு தெரிவித்து வாக்களித்தமையை தொடர்ந்து ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்போது இறுதியில் தவிசாளர் கி.ஜெயசிறில் உரையாற்றுகையில்,

நாம் இப்பிரதேசத்தில் 112 பேர் போட்டியிட்டு 12 பேர் உறுப்பினர்களாக மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். கௌரவமாக நடந்துகொள்ள வேண்டும்.அவர்கள் வயிற்றிலடிக்கக்கூடாது. என் மீது கோபம் என்றால் என்னிடம் நேரடியாக காட்டுங்கள்.

ஊழியர்கள் தவறு செய்தால் என்னிடம் முறையிடுங்கள். மாறாக அவர்களை வீட்டிற்கு அழைக்கிறீர்கள். அவர்களுக்கும் சுய மரியாதையுண்டு என்பதை மறந்து விடக்கூடாது. உறுப்பினர் றனீசின் உரையிலிருந்து நல்ல பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்.

அதை விடுத்து ஊடக நாடகம் ஆடுகின்றீர்கள். உண்மையும், நேர்மையும், சத்தியமும் என்றும் நிலைக்கும். அது தான் என்றும் வெல்லும். தந்திரமும், சூழ்ச்சியும் ஒரு போதும் வெல்லாது. இந்த அமர்வு மூலம் கற்றறிந்த பாடங்களை பெற்றிருக்கிறீர்கள். மறப்போம், மன்னிப்போம்.

கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும். இன்று அனைவரும் இணைந்து அந்த ஊழியர்களுக்காக ஆதரவளித்தீர்கள். அதுபோல தொடர்ந்தியங்க வேண்டும். இனியாவது குறுகிய அரசியல் செய்யாது மக்கள் சேவையாற்ற முன்வாருங்கள். எனவும் தெரிவித்துள்ளார்.