போதையொழிப்பு செயற்றிட்டத்தின் முதலாவது மீளாய்வுக்கூட்டம்!

Report Print Kumar in சமூகம்

ஜனாதிபதியின் தேசிய போதையொழிப்பு திட்டத்திற்கு அமைவாக பிரதேச மட்ட குழுக்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் போதையொழிப்பு செயற்றிட்டத்தின் இந்த ஆண்டுக்கான முதலாவது மீளாய்வுக்கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியினால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் போதையொழிப்பு நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து இங்கு ஆராயப்பட்டது.

குறிப்பாக 2017ஆம் மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட போதையொழிப்பு செயற்றிட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

அதேபோன்று 2019ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் போதையொழிப்பு செயற்றிட்டங்கள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

போதையொழிப்பு நடவடிக்கைகளின்போது பொலிஸார் மற்றும் மதுவரித்திணைக்களத்தின் ஒத்துழைப்புகள் குறித்தும் எதிர்காலத்தில் அவர்களின் பங்குபற்றல் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பகுதியிலேயே போதைவஸ்த்து பாவனைகள் அதிகளவில் காணப்படுவதாகவும் அப்பகுதிகளில் ஐந்து பொலிஸ் குழுக்கள் விசேட போதைப்பொருள் பாவனையினை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் அடையாளம்காணப்பட்டு அவர்களது விபரங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர்கள் மீதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர்கள், மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள், மதுவரித்திணைக்கள அதிகாரிகள், கல்வி திணைக்களம், சமூக சேவைகள் திணைக்களம், சுகாதார திணைக்களம் என பல்வேறு திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.