காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு ஆதரவு!

Report Print Kumar in சமூகம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு ஆதரவு வழங்கும் என இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஈழ வரலாறு சோகத்தோடுதான் தொடர்கின்றது. முள்ளிவாய்க்காலுக்கு முன்பே இந்த சோகம் நம்மோடு இருந்தது. அதன் காரணகர்த்தாக்களும் நம்மோடு சேர்ந்து சோகிப்பதும் இன்னொரு சோகம்தான், இதற்கு சர்வதேச தரத்திலான பரிகாரம் எமக்கும், எமது மக்களுக்கும் வேண்டும்.

காணாமல் போனோர் தொடர்பில் ஒரு சட்ட ஏற்பாடு உண்டு, அதுதான் அந்த ஏழு வருடம் என்னும் காலக்கெடு. காணாமல் ஆக்கப்பட்டோருக்கு அதுபொருந்தாது, ஒப்படைக்கப்பட்டவர்கள், வாக்குறுதியின் பேரில் தாமே தம்மை ஒப்படைத்தவர்கள், பலரின்கண்காணப் பிடித்து செல்லப்பட்டவர்கள் நூற்றுக்கு நூறு வீதம், பிடித்துச் செல்லப்பட்டவர்கள் என்று கருதப்படுபவர்கள் எல்லாம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தான்.

உண்மையிலே இவ்வித நிகழ்வுகளில் சம்மந்தப்பட்டவர்கள் எல்லாம் தனித்தனியாகவும், அவர்கள் சார்ந்த பொது அடையாளம் சார்பிலும் பொறுப்புக்கூற வேண்டியவர்களே. என்ன நோக்கத்துக்காக எது செய்யப்பட்டாலும் இவர்கள் பொறுப்புக்கூறலில் இருந்து தப்ப முடியாது.

சட்டங்களுக்குத் தப்பினாலும் சாபமாய் இப்பழி அவர்களை தொடரும். அரசைப் பொறுத்த வரையிலே முந்திய அரசு இதனை செய்தது என்பது உண்மை. ஆனால் வழியுரிமை அடிப்படையில் நிகழ்கால அரசே இதற்கும் பொறுப்புக்கூற வேண்டும்.

போரை முடித்து வைத்த அரசுகளுக்கு முன்னைய அரசு இது தொடர்பில் வாக்குறுதி அளித்தது இதுவும் சேர்ந்து இன்றைய அரசின் சுமையை இரட்டிப்பாய் ஆக்கி விட்டது என்பது யதார்த்தம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் 30/1, 34/1 தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டியது இன்றைய அரசின் தார்மீகக் கடமை. இந்தப் பொறுப்பில் இருந்து விலக அரசுக்கு இம்மியளவும் இடமளித்தல் ஆகாது.

இதற்கான பொறிமுறை இன்னும் கூடிய நடைமுறைச் சாத்தியத்தைப் பெற வேண்டும். இதனை செயற்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் உழைத்துக்கொண்டே இருக்கும்.

இவ் வகையிலே எதிர் வரும் 19ஆம் திகதி அன்று கிழக்கு மாகாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நடாத்தவுள்ள கடையடைப்புப் (ஹர்த்தால்) போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றது. இந்த அறப்போர் வெற்றிபெற அனைவரும் இது எங்கள் வீட்டுப்பிரச்சினை என்ற வகையில் ஆதரவு வழங்குவோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒவ்வொரு ஆதரவாளனும் இந்த கடையடைப்பு போராட்டம் முழுமையான வெற்றிபெற தங்கள் செயற்பாட்டு ரீதியான ஆதரவினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது.