பெருந்தொகை விஷப் போதைப் பொருள் மற்றும் 7 துப்பாக்கிகளுடன் நால்வர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், வத்தளை ஹேக்கித்தை பகுதியில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்து, ஹெரோயின் உட்பட விஷப் போதைப் பொருட்களுடன் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

17 கிலோ கிராம் ஹெரோயின், ஒரு கிலோ கொக்கேய்ன், ஒரு கிலோ கிராம் ஹேஸ், ஒரு கிலோ கிராம் ஐஸ் ஆகிய விஷப் போதைப் பொருட்களை அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கம்பளையில் அண்மையில் கைது செய்யப்பட்ட ஜீ பூம்பா என்று அழைக்கப்படும் மொஹமட் சியாம் என்ற பாதாள உலக குழு உறுப்பினரின் கூட்டாளிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் பெண்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் காரில் சென்ற இரண்டு பேர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதும் இந்த சந்தேக நபர்கள் என தெரியவந்துள்ளதாக விசேட அதிரடிப்படையின் கட்டனை அதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் கூறியுள்ளார்.

அத்துடன் கொழும்பு ஜெம்பட்டா வீதியில் ஒரு மாதத்திற்கு முன்னர் மோட்டார் சைக்கிளில் வந்து ஒருவரை சுட்டுக்கொன்ற மலிந்து என்ற சந்தேக நபரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப் பொருட்களுக்கு மேலதிகமாக இரண்டு மைக்ரோ ரக கைத்துப்பாக்கிகள், 5 ரிவோல்வர்கள், அவற்றுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள், 15 போலி வாகன இலக்கத்தகடுகள், இரண்டு கை விலங்குகளையும் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

Latest Offers