கிழக்கு மாகாணத்தில் ஏற்று நீர்பாசன திட்டம் ஆரம்பிப்பு

Report Print Kumar in சமூகம்

கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக சூரிய மின்கலம் மூலம் ஏற்று நீர்பாசன திட்டம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - களுதாவளையில் குறித்த புத்தாக்க முறையிலான சூரிய சக்தியை பயன்படுத்தி ஏற்று நீர்பாசன திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு கிழக்கு மாகாண நீர்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் செ.திலகராஜா தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

சுமார் ஒரு கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட குறித்த ஏற்று நீர்பாசன திட்டம் விவசாயிகளும், தோட்ட செய்கையாளர்களும் மிகவும் நன்மையடையவுள்ளதுடன் நீர்ப்பாய்ச்சல் செலவும் குறைக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு வாவியில் இருந்து வறட்சியான காலப்பகுதியில் ஏற்று நீர்பாசன திட்டம் மூலம் நீரை பெற்று களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள பெரியகுளத்தில் நீரை சேமிக்கச் செய்து அதன் மூலம் விவசாய செய்கைகளுக்கு நீரை வழங்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏற்று நீர்பாசன திட்டம் மூலம் இப்பகுதியில் உள்ள 400 ஏக்கருக்கும் அதிகமான காணிகளில் நெற்செய்கை பண்ண முடிவதுடன் நெற்செய்கை காலம் தவிர்ந்த காலத்தில் உப உணவு பயிர்ச்செய்கையினையும் மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதன்போது கிழக்கு மாகாண விவசாய, நீர்பாசன, கால்நடை உற்பத்தி,மீன்பிடி அமைச்சின் செயலாளர் க.சிவநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன்,மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம்,மட்டக்களப்பு மாவட்ட பிரதி நீர்பாசன திணைக்கள பிரதிப்பணிப்பாளர் வே.இராஜகோபாலசிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கனகசபை உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

Latest Offers