கோறளைப்பற்று பிரதேச சபைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்!

Report Print Navoj in சமூகம்

தமது பிரதேசத்தில் குப்பை கழிவுகளை கொட்டும் பணியினை மேற்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்து கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பறங்கியான் மடு கிராம மக்கள் கோறளைப்பற்று பிரதேச சபைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டம் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிரான் பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை தமது பிரதேசத்தில் கொட்டுவதனால் தமது அன்றாட வாழ்வில் இயல்பு நிலையில் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து இக்கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று காலை குப்பை கொட்டும் பிரதேசத்தில் கூடிய மக்கள் கோஷங்களை எழுப்பியவாறும் வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

'நோயற்ற நல்ல சூழலாக இருந்த எங்கள் கிராமத்தில் குப்பைகளை கொட்டி நோய் ஏற்படுத்தாதே, காட்டு யானை தொல்லை, குப்பைகளை கொட்டுவதை உடன் நிறுத்து, எமது சூழலை தூய்மையாக வைத்திருப்பதே ஒவ்வொருவருடைய கடமை, குப்பை கொட்டுவதை உடன் நிறுத்து.' என்பன போன்ற வாசகங்கள் உள்ளடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர்.

வழமை போன்று குப்பைகளை ஏற்றிக்கொண்டு வந்த பிரதேச சபைக்கு சொந்தமான உழவு இயந்திரங்கள் அனைத்தும் போராட்டக்காரர்களால் இடை வழியில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.