கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்காக பக்தர்கள் வருகை

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று இடம்பெறவுள்ள நிலையில் பக்தர்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் அங்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

குறிகட்டுவான் இறங்கு துறையில் இருந்து நேற்று காலை 7.45 மணியளவில் முதலாவது படகு சேவை ஆரம்பமானது.

மேற்படி ஆலய வருடாந்த திருவிழாவுக்கான பயண ஏற்பாடுகளை கடற்படையினர் மேற்கொண்டிருந்ததுடன் 100இற்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் அப்பகுதியில் ஈடுபடுவதற்காக வடதாரகை படகு மூலம் அப்பகுதிக்கு சென்றனர்.

இதில் மிக முக்கியமாக இலங்கையைச் சேர்ந்த 7000 வரையான பக்தர்களும் இந்தியாவிலிருந்து 2200 பேர் வரையிலும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உற்சவத்திற்காக மக்களின் நலன் கருதி நேற்று அதிகாலை 3.30 மணி முதல் யாழ். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் குறிகட்டுவானை நோக்கிப் புறப்பட்டதுடன் அந்தச் சேவைகள் காலை 10.30 மணிவரை தொடர்ந்து நடைபெற உள்ளது.

அதேபோன்று 16 ஆம் திகதி காலை முதல் குறிகட்டுவானிலிருந்து யாழிற்கான விசேட பேருந்து சேவைகள் நடத்தப்படும்.

மேலும் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களின் நலன் மற்றும் வசதி கருதி கூடுதலான பேருந்து சேவைகள் ஒழுங்குபடுத்தப்படுவதோடு குறிகட்டுவானிலும் நீர் மலசலகூட வசதிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Latest Offers