புல்மோட்டையில் பெரும் குழப்பம்! விசேட அதிரடிப்படையினர் குவிப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - புல்மோட்டை ஸலாமிய பொது மைதானத்துக்கு சொந்தமான காணியை புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்தினர் விசேட அதிரடிப்படையை அழைத்து முறையற்றவிதத்தில் வேலியடைக்கமுற்பட்டபோது புல்மோட்டையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பதற்ற நிலை இன்று (16) மாலை இடம் பெற்றுள்ளது.

கடந்த பெப்ரவரி 22ம் திகதி குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட ஸலாமிய பொது மைதானத்துக்கு சொந்தமான ஒரு பகுதி இலங்கை கனியமணல் கூட்டுத்தாபனத்தினரால் சட்ட விரோதமாக சுற்றுவேலி அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பின் விளைவாகவும் பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்கவும் சுமூகமான முறையில் குறித்த நடவடிக்கை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இருந்தபோதிலும் இன்று சனிக்கிழமை அது போன்றவொரு சட்ட விரோதமான செயற்பாடு இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் குறித்த இடத்தில் ஒன்று திரண்ட பொது மக்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து பாதுகாப்பினை கருத்திற்கொண்டு விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டு குறித்த செயற்பாடு மக்களின் தொடர் எதிப்பினாலும் வருகை தந்த பிரதேச செயலாளர், மற்றும் அரசியல்வாதிகளின் பேச்சுவார்த்தை மூலம் குறித்த செயற்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

புல்மோட்டை கனிய மணல் தொழிற்சாலைக்குச் சொந்தமான மண்ணைச் சுற்றி தற்காலிக பாதுகாப்பிற்காக வேலி அமைக்க முற்பட்டபோது மாலை நான்கு மணியளவில் பிரதேச மக்களுடன் அரசியல்வாதிகளும் இணைந்து தடுக்க முற்பட்டபோதே இரு தரப்பிற்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விஷேட அதிரடிப்படையினரும் பொலிசாரும் விரைந்ததுடன் திருகோணமலை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், குச்சவெளி பிரதேச செயலாளர் மற்றும் புல்மோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்களின் சாதுரியத்தினால் நிலமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை மாவட்ட செயலகத்திலும் அதேபோல் புதன்கிழமை அமைச்சின் செயலாளர்களுக்கும் இடையிலான பேச்சு வார்த்தையினைத் தொடர்ந்து மண்ணிற்கான பாதுகாப்பு வேலி அமைப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் உயர் அதிகாரிக்கிடையிலான இன்றைய சம்பவத்தின் இறுதியில் இணக்கப்பாடு எட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers