கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் வியாபார முகாமைத்துவ பிரிவு மாணவனை தாக்கிய சக இரண்டு மாணவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கட்டளையிட்டுள்ளார்.

திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ. எம்.அப்துல் முஹீத் முன்னிலையில் இன்று அவரது வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் அதே பல்கலைக்கழகத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் 21 வயதுடைய மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த களுவாஞ்சிகுடி மற்றும் வெல்லாவெளி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவருகின்றது.

கடந்த 12ம் திகதி பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சிற்றுண்டி சாலையில் வைத்து மூதூர் - நெய்தல் நகர் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகம்மட் அப்ராஸ் என்ற சக மாணவனை தாக்கியதாகவும் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அம்முறைப்பாட்டையடுத்து இம்மாணவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் நிலாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவன் தொடர்ந்தும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் நீதவான் முன்னிலையில் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers