மாகாண கல்விப்பணிப்பாளர் கல்முனை பற்றிமாவுக்கு திடீர் விஜயம்!

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.

நேற்றைய தினம் குறித்த விஜயத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவர் கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல்ஜலீல் பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் குழுவினரையும் அழைத்து சென்றிருந்தார்.

மாகாண கல்வி பணிமனையால் விடுக்கப்படுகின்ற அறிவுறுத்தல்கள் விடயங்கள் பாடசாலையை சென்றடைந்துள்ளனவா? என்பதை கண்டறிந்து கல்வி அதிகாரிகள் முன்னிலையிலேயே அதற்கான தீர்வையும் பெற்றுக்கொடுப்பது ஒரு நோக்கமாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

க.பொ.த. சாதாரணதர மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கு முகமாக குறித்த வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்களை அழைத்து சுதந்திரமான கலந்துரையாடல்களை செய்வது அடுத்த நோக்கமாகவிருந்தது.

அதற்கமைய அவர் அடைவுமட்டத்தை அதிகரிக்க செய்வதில் ஆசிரியர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் சவால்கள் பற்றி சுதந்திரமாக விரிவாக நேரம் வழங்கி கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.

ஆசிரியர்களும் சுயாதீனமாக கருத்துக்களை வழங்கினர். அவ்விடத்திலேயே பலவிடயங்களுக்கு தீர்வு வழங்கப்பட்டன.

இதேபோன்ற சந்திப்புகள் கிழக்கில் மாணவர்கள் கூடுதலாகவுள்ள பாடசாலைகளுக்கு நேரடியாகச்சென்று அந்நதந்த வலய அதிகாரிகள் முன்னிலையில் தொடர்ந்து நடைபெறும் என பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று க.பொ.த.உயர்தர மாணவர்களின் அடைவுமட்டத்தை மேம்படுத்தும் முகமாக கடந்தவாரம் திருகோணமலை வலயத்தில் கல்விப்பணிப்பாளர்களுடன் ஆசிரியர்களை சந்தித்த மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்துவது எப்படி? என்பது தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

Latest Offers