மாணவர் ஆலோசனை செயற்பாட்டுக்கு கல்வியமைச்சு விண்ணப்பம் கோரல்!

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் மாணவர் ஆலோசனை செயற்பாட்டிற்காக கல்வி மாணிப்பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்க்கும் விண்ணப்பத்தை கல்வி அமைச்சு கோரியுள்ளது.

நேர்முகப்பரீட்சை மற்றும் பிரயோகப்பரீட்சை மூலம் இலங்கை ஆசிரியர் சேவை 2-ii ஆம் தரத்திற்கு சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியான வர்த்தமானியில் கோரப்பட்டுள்ளது. விண்ணப்பமுடிவுத் திகதி 12.04.2019 திகதியாகும்.

18-35 வயதுக்கிடைப்பட்ட ஆண்,பெண் இருபாலாரும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது நிறுவனத்தில் உளவியல் அல்லது சமூகவியல் பாடங்களில் பெற்ற கல்விமாணிப்பட்டத்தை வைத்திருப்போர் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

நேர்முகப்பரீட்சைக்கு புள்ளிகள் இல்லை. ஆனால் பிரயோகப்பரீட்சைக்கு 25 புள்ளிகள் வழங்கப்படும். அதேவேளை மாகாண ரீதியாக வெற்றிடங்கள் தேசிய பாடசாலை மற்றும் மாகாணப்பாடசாலை பற்றியும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நியமனம் பெறும் பாடசாலையில் கட்டாயம் 5 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். இடைநடுவில் எக்காரணம் கொண்டும் இடமாற்றம் வழங்கப்படமாட்டாது என கல்வியமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் யுத்தத்தினாலும், சுனாமியினாலும் பாதிக்கப்பட்டு ஆலோசனை வழிகாட்டல் தேவைப்படும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள தேசிய பாடசாலைகளில் வெற்றிடம் உள்ளதெனக் குறிப்பிட்ட அதேவேளை மாகாணப்பாடசாலைகளில் வெற்றிடங்கள் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.