புத்த விகாரையின் காணியை ஒப்படைக்குமாறு கோரும் பிக்கு! முனியப்பர் ஆலயத்தில் கலந்துரையாடல்

Report Print Theesan in சமூகம்

இந்து ஆலயத்திற்கு அருகே அமைந்துள்ள புத்த விகாரையின் காணியை பௌத்த மதகுரு தமக்கு கோரியுள்ள நிலையில் அது தொடர்பாக பேயாடி கூழாங்குளம் மக்கள் நேற்று மாலை அங்குள்ள முனியப்பர் ஆலயத்தில் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர்.

1995ஆம் ஆண்டு அப்பகுதி இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டது. இதன் பின் இராணுவத்தினர் தாம் அமைத்த இராணுவ முகாமில் இராணுவ வழிபாட்டிற்காக சீமெந்தினால் புத்தருடைய சிலை ஒன்றை நிறுவி வழிபட்டு வந்தனர்.

ஆனால் தற்போது அந்தப் பகுதிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட போதும் அந்த புத்தர் சிலை அவ்விடத்தில் இருந்து அகற்றப்படவில்லை.

இந்த நிலையில், வவுனியாவில் உள்ள பிக்கு ஒருவர் குறித்த புத்தர் சிலை அமைந்துள்ள காணியை ஒப்படைக்கும் படி மாவட்ட செயலகத்தை கோரியுள்ளார்.

ஆனால், இவ்விடயம் தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துரையாடியே தீர்மானம் எடுக்கப்படும் என மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

இக் கலந்துரையாடலில் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதுக்குளம் வட்டார உறுப்பினர் ப.சத்தியநாதன் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.