யாழ். மாநகரத்திற்கு கழிவகற்றலை மேம்படுத்துவதற்கான உதவியை வழங்கியுள்ளது ஜப்பான் அரசு

Report Print Sumi in சமூகம்

பதவியேற்ற பின் இடம்பெற்ற ஜப்பான் அரசாங்கத்தின் தூதுவர்களுடான சந்திப்பில் வைத்து மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் யாழ். மாநகரில் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான வாகனங்கள் தொடர்பிலான கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.

இந்த மேற்படி கோரிக்கை தொடர்பில் சுமார் 11 மாதங்களாக தொடர்ச்சியான முயற்சிகளும், பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வந்ததுள்ளன.

அதன் பிரகாரம், ஜப்பான் அரசினால் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்காக 15 மில்லியன் பெறுமதியான உதவி திட்டத்தை யாழ். மாநகரசபைக்கு வழங்குவதற்கான உடன்படிக்கை நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா மற்றும் யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர். ஒப்பந்தத்தின் பிரகாரம் மாநகரசபைக்கு மீள் புதுப்பிக்கப்பட்ட நான்கு கழிவகற்றல் ட்ரக் வண்டிகள் வழங்கப்படவுள்ளன.

ஜப்பான் அரசின் இந்த உதவித்திட்டத்தின் மூலம் யாழ். மாநகரத்தின் திண்ம கழிவகற்றல் செயற்பாடுகளை மிகவும் சிறப்பாகவும், முதல்வரின் வட்டார ரீதியான திண்ம கழிவகற்றல் செயன்முறையை உள்ளடக்கிய புதிய பொறிமுறையை அமுல்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருப்பதுடன், சுத்தமான பசுமை மாநகரத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளமை இங்கு குறிப்பிடப்படவேண்டிய அம்சமாகும்.

மேற்படி கைச்சாத்திடல் நிகழ்வில் ஜப்பான் தூதுவருடன், இலங்கைக்கான ஜப்பான் தூதுவராலயத்தின் முதன்மை செயலாளர் சேக் வரடனி (Sake Waratani) மற்றும் அரசியல் விவகார இரண்டாவது செயலர் (Takeshi Ozaki) உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Latest Offers