9 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் வசதியின்றி சிரமத்தில் எருவிட்டான் கிராம மக்கள்

Report Print Ashik in சமூகம்

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட எருவிட்டான் கிராம மக்கள் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக குடி நீர் வசதி இன்றி பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரச்சினை தொடர்பில் நானாட்டான் பிரதேச செயலாளர் மற்றும் நானாட்டான் பிரதேசசபையின் தவிசாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,

எருவிட்டான் கிராமத்தை சேர்ந்த சுமார் 25 குடும்பங்கள் வரை இவ்வாறு பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர்.

எருவிட்டான் கிராமத்தில் உள்ள நீர்த்தாங்கி பழுதடைந்த நிலையில் காணப்படுவதோடு, நீர் குழாய்களும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.

மேலும் குறித்த தாங்கிக்கான மின்மோட்டர் பழுதடைந்து பல மாதங்களாகுகின்றன. இதனால் குடிநீரை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் அக்கிராம மக்கள் பல்வேறு சௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

தற்போதைய காலநிலை மாற்றத்திற்கு அமைய கடும் வெப்பநிலை நிலவுகின்றது. இதனால் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் போதிய நீர் வசதி இல்லாததால் சிரமமாக உள்ளது.

இதனால் கிராமத்தில் உள்ள சிறு பிள்ளைகளுக்கு தொற்று நோய் ஏற்படும் நிலை காணப்படுகின்றது. எனவே குறித்த பிரச்சினை தொடர்பாக நானாட்டான் பிரதேச செயலாளர் மற்றும் நானாட்டான் பிரதேசசபையின் தவிசாளர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

மக்களின் பிரச்சினை தொடர்பாக நானாட்டான் பிரதேசசபையின் தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதியை வினவிய போது,

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வட்டாரங்களினூடாக நீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஏற்கனவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதற்கமைவாக கடுமையாக பாதிப்புக்குள்ளான கிராமங்கள் பலவற்றிற்கு பிரதேசசபை உறுப்பினர்கள் ஊடாக நீர் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

குறித்த கிராமத்தின் நீர் பிரச்சினை தொடர்பாக கடந்த இரு நாட்களுக்கு முன் எழுத்து மூலம் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அந்த கிராமத்தை சேர்ந்த எவரும் வந்து கதைக்கவில்லை.

அவசர நிலையை கருத்தில் கொண்டு அந்த கிராமத்திற்கு குடி நீரை வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers