இலங்கையில் இழைக்கப்பட்ட போர்க்குற்றம்! ஐ.நாவில் கருணாஸ் ஆதங்கம்

Report Print Jeslin Jeslin in சமூகம்
இலங்கையில் இழைக்கப்பட்ட போர்க்குற்றம்! ஐ.நாவில் கருணாஸ் ஆதங்கம்

போர்க்குற்றம் தொடர்பான நீதி விசாரணையை இலங்கை அரசு நீர்த்துப் போகச் செய்வதாக, தென்னிந்திய நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் ஐ.நாவில் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில், குறித்த கூட்டத்தில் பார்வையிடும் பேச்சாளராக கலந்து கொண்டு பேசும்போது கருணாஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த 2009ஆம் ஆண்டில் உலகமே நினைத்து பார்க்காத வகையில் தமிழீழத்தில் தமிழ் இனப்படுகொலை நடந்தேறியது. இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டிய சர்வதேச சமூகம், தங்களது கடமையில் இருந்து தவறியுள்ளதை யாரும் மறுக்க முடியாது.

இனப்படுகொலை நடந்தேறி 10 ஆண்டுகள் கடந்து விட்டன. இலங்கை சிங்கள அரசு நடத்தியது இனப்படுகொலைதான் என்பதற்கு பல வகைகளில், அடுக்கடுக்கான ஆதாரங்கள், நேரடி விசாரணைகள் – சாட்சிகள் என அனைத்தும் அடுக்கி வைத்தப்பிறகும் நீதிக்கான விசாரணைக்கு காலம் கடத்தும் காரணமென்ன? ஆனால் ஐ.நா-வின் உள்ளக விசாரணை நீர்த்துப் போகச் செய்வதற்கான அனைத்து வேலைகளையும் பெரும் வலைப்பின்னல் அமைத்து தொடர்ந்து தடுத்து வருகிறது இலங்கை அரசு.

கடந்த 2015ஆம் ஆண்டு வட அமெரிக்காவின் முன்முயற்சியால் கொண்டுவரப் பட்ட தீர்மானத்தின்படி, சிங்கள அரசு தன்னைத் தானே விசாரித்துக் கொள்ளும் பன்னாட்டு நீதிபதிகள் பங்கேற்புடனான கலப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டுமெனக் கோரியது. 2017ஆம் ஆண்டு வரை அது அமைக்கப்படவில்லை.

எனவே, இரண்டாண்டு கால அவகாசமும் வழங்கப்பட்டது! ஆனால் இப்போது மீண்டும் இரண்டாண்டுகள் இலங்கைக்கு கால அவகாசம் ஏன் வழங்க வேண்டும்.

சர்வதேச சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயத்தை நிறுவுதலே பெருமளவில் பாதிக்கப்பட்டவர்களான தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான வழிமுறையாகும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

இலங்கைக்கு மீண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படக் கூடாது. இலங்கை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு, அல்லது போர்க்குற்றப் புலன் விசாரணைக்கென்று இலங்கைக்காக அமைக்கப்படும் சிறப்புப் பன்னாட்டுக் குற்றத் தீர்ப்பாயத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்டோரின் துயரம் குறித்தும், ஏனைய சர்வதேச மனித உரிமை, மனிதநேயச் சிக்கல்கள் குறித்தும் கண்காணித்து ஆறு மாதத்துக்கொரு முறை அறிக்கையளிக்கும் பொறுப்பில் இலங்கைக் கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் அமர்த்தப்பட வேண்டும்.

இன அழிப்புச் சான்றுகளை அழியவிடாமல் காக்க ஒரு நடுநிலையான பன்னாட்டுப் பொறிமுறை அமைக்கப்படவேண்டும். இலங்கையில் நடைபெற்றது வெறும்போர்குற்றமோ மனித உரிமை மீறலோ மட்டு மல்லாது அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை என்பதை ஐ.நா. பொது சபை அறிவிக்க வேண்டும்.

சர்வதேச விசாரணையும் பொது வாக்கெடுப்புமே தமிழ் மக்களுக்கான ஒரேதீர்வு. நீதிக்கான மனித நேயக்குரலை இந்த ஐ.நா. அறமன்றம் ஓங்கி உயர்த்தி இவ்வுலகுக்கு உரைக்கும் என்று உறுதியாக நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.


You may like this video

Latest Offers