நகரசபைக்கு சொந்தமான ஒரு இடத்தை பிரதேசசபைக்கு விட்டுக் கொடுக்க முடியாது

Report Print Ashik in சமூகம்

மன்னார் நகரசபைக்கு சொந்தமான ஒரு இடத்தை பிரதேசசபைக்கு விட்டுக் கொடுக்க முடியாது என மன்னார் நகரசபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்துள்ளார்.

எனவே மன்னார் நகரசபை கடற்கரை பூங்கா காணி தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு மன்னார் நகரசபை உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

மன்னார் நகரசபையின் 13ஆவது அமர்வு இன்று காலை மன்னார் நகரசபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது தலைமை உரை நிகழ்த்துகையிலேயே அவர் மேற்படி விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் நகரசபை கடற்கரை பூங்கா காணி தொடர்பாக பிணக்கு ஏற்பட்டுள்ளது. இது ஒரு எல்லை பிரச்சினையாகவே காணப்படுகின்றது. குறித்த பிரச்சினையானது தனிப்பட்ட முறையில் மன்னார் நகரசபையின் தலைவருக்கோ, செயலாளருக்கோ அல்லது உறுப்பினர்களுக்கோ இல்லை.

இந்தபிரச்சினையானது நகரசபைக்கும், நகரசபை பிரிவுக்கு உட்பட்ட மக்களுக்குமான பிரச்சினை. நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

மன்னார் நகரசபைக்கு சொந்தமான ஒரு இடத்தை பிரதேசசபைக்கு விட்டுக்கொடுக்க முடியாது. மன்னார் நகரசபை எல்லை என்பது வெறுமனே 3 கிலோமீற்றர் நீளத்தினாலும், 3 கிலோமீற்றர் அகலத்தினாலும் உடைய ஒரு சபையாகவே நாங்கள் இப்போது பார்க்க வேண்டியுள்ளது.

உண்மையில் 28000 வாக்காளர்களைக் கொண்ட இச் சபையானது நிலப்பரப்பினால் குறுகி சனத்தொகையினால் அதிகரித்து காணப்படும் என்றால் நிர்வாகம் நடத்துவதில் பாரிய சிரமம்.

மன்னார் நகரசபையின் எல்லையானது பொதுவாக இருக்க வேண்டியது. மன்னார் தள்ளாடிசந்தியில் இருந்து. ஆனால் எல்லை நிர்ணய சபையின் அறிக்கையின் படி பிரதேச சபை தெரிவிக்கின்றது பாலத்திற்கு அருகாமையில் இருந்து என்று. அதனை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எமது எல்லையானது தள்ளாடிசந்தியில் இருந்து என்றால் தான் அது எமக்கு பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் நாம் எல்லோறும் ஒற்றுமையாக இருந்து இந்த விடயத்தை முன்னெடுக்க வேண்டும்.

நாளை குறித்த எல்லை தொடர்பான வழக்கு விசாரணை மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது. நீதிமன்ற வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers