மாவை சேனாதிராஜாவின் நடவடிக்கையால் காணி அளவீடு நிறுத்தம்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

வலிகாமம், வடக்கு கடற்படை முகாமிற்காக 252 ஏக்கா் பொதுமக்களுக்கு சொந்தமான காணியை சுவீகாிப்பதற்கு 22ம் திகதி நாளை நடைபெறவிருந்த காணி சுவீகாிப்பிற்கான அளவீட்டு நடவடிக்கைகள் சடுதியாக நிறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜாவின் முயற்சியினால் இந்த காணி அளவீட்டு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து மேலும் தொியவருவதாவது,

252 ஏக்கரில் பெரியளவிலான கடற்படை முகாமை அமைப்பதற்காக ஜே/226 பகுதி நகுலேஸ்வரம் தொடர்புபட்ட நிலங்களையும் சுவீகரிக்க நாளை 22ஆம் திகதி அளவீடு செய்யப்படும் என நில அளவைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.

தமக்கு பிரதமரால் வழங்கப்பட்ட உறுதிமொழியை மீறி இந்த காணி சுவீகரிப்பு முன்னெடுக்கப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியிருந்தது.

இந்த நிலையில் நாளை நடைபெறவிருந்த காணி அளவீட்டுப் பணி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கு அமைய இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க மற்றும் பிரதமர் அலுவலகத்தால் இன்று காலை தமக்கு அறிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஊடக அறிக்கை மூலம் கூறியுள்ளாா்.