கொட்டியாரப்பற்று என்னும் தமிழ் பிரதேச செயலாளர் பிரிவொன்றை தனியாக ஸ்தாபிப்பதற்கு கோரிக்கை

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - மூதூர் தேர்தல் தொகுதியில் தமிழ் கிராமங்களை உள்ளடக்கிய கொட்டியாரப்பற்று என்ற தனியான தமிழ் பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் நந்தன் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

நிர்வாக ரீதியில் திருகோணமலை மாவட்டமானது கிழக்கு மாகாணத்திற்குரியது.

திருகோணமலை மாவட்டம் 11 பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கி உள்ளதோடு 230 கிராம அலுவலர் பிரிவுகளையும் 645 கிராமங்களையும் கொண்டுள்ளது.

நிலப்பரப்பு அடிப்படையில் திருக்கோணமலை பட்டணமும், சூழலும் பிரதேச செயலாளர் பிரிவின் நிலப்பரப்பை விட மூதூர் பிரதேச செயலாளர் பிரிவின் நிலப்பரப்பு அதிகமாகும்.

மேலும் தற்போது உள்ள மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குள் உள்ளடங்கும் தமிழ் கிராமங்கள் கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களைக் காட்டி அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டே வந்தது.

அத்தோடு மூதூர் பிரதேச செயலாளர் பிரிவின் உள்ள தமிழ்க்கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதியும் மக்களின் வாழ்க்கைத் தரமும் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.

எனவே எதிர்காலத்தில் தமிழ் கிராமங்களின் நன்மை கருதி மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குள் உள்ளடங்கும் தமிழ் கிராமங்களை உள்ளடக்கிய கொட்டியாரப்பற்று என்னும் தமிழ் பிரதேச செயலாளர் பிரிவொன்றை தனியாக புதிதாக ஸ்தாபிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers