ஐந்து இலட்சம் தந்து விட்டு கடனாளியாக்கி...! சஜித்திடம் காப்பாற்றுமாறு கோரிக்கை

Report Print Theesan in சமூகம்

வவுனியா - பாரதிபுரத்தில் வீட்டுத்திட்டத்திற்கான நிதி வழங்கப்படவில்லை என தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

பாரதிபுரம் பலநோக்கு மண்டபத்திற்கு முன்னால் குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது “வீடமைப்பு அதிகாரசபையே நுண்கடன் போல் பாதிக்கப்பட்டோம் உன் வீட்டுத்திட்டத்தால், சஜித் அமைச்சரே வீட்டுத்திட்ட கடனில் இருந்து எங்களை காப்பாற்றுங்கள், ஐந்து இலட்சம் தந்து விட்டு கடனாளியாக்கி வங்கிப்புத்தகத்தையும் காணி அனுமதி பத்திரத்தையும் பறித்து விட்டாயே“ என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஆர்ப்பாட்டகாரர்கள் தாங்கியிருந்தனர்.

2018ஆம் ஆண்டு பாரதிபுரத்தில் வழங்கப்பட்ட 146 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு வேலைத்திட்டங்கள் நடைபெற்று வந்தன.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நபரொருவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான ஒவ்வொரு வீட்டுக்கும் கட்டம் கட்டமாக நிதி வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த வருடம் நாட்டில் நிலவிய அரசியல் குழப்பம் போன்ற பல்வேறு விடயங்களால் குறித்த வீட்டுத்திட்டத்திற்கான அடுத்த கட்ட நிதிகள் இதுவரை வழங்கப்படவில்லை.

இதனால் எமக்கு வழங்கப்பட்ட வீடுகளை கட்டி முடிக்க முடியாமல் உள்ளோம். மேலும் 2018ஆம் ஆண்டு வீட்டுத்திட்டம் வழங்கப்படும் போது காணப்பட்ட மணல், சீமெந்து போன்ற கட்டட பொருட்களின் விலைகள் தற்போது உயர்ந்துள்ளன.

இதனால் ஐந்து இலட்சம் ரூபாவில் எவ்வாறு மிகுதி வேலைகளை முடிப்பது என்ற நிலை தற்போது உருவாகியுள்ளதுடன், நாம் தற்போது மேலும் கடனாளியாகி உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers