வில்பத்து வனப்பகுதியை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாட்டை முற்றாக தடுக்க வேண்டும்!

Report Print Gokulan Gokulan in சமூகம்

வில்பத்து வனப்பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் சிலரது தவறான புரிதலால், மீண்டும் இனவாதத்தை தூண்டும் வகையிலான முயற்சிகள் உடன் நிறுத்தப்பட வேண்டு என, வடபகுதி பிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வவுனியா ஸ்ரீ போதிதக்ஷிணாராம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, விகாரையின் பிரதான சங்கநாயக்க தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இடம்பெயர்ந்து சென்றவர்களை பார்க்கிலும், மீள் குடியமர்த்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சந்ததி விருத்தி ஏற்படுவது சாதாரண விடயம்.

அவ்வாறே, அம்மக்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்த ​வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. இதனையே அரசாங்கம் செய்து வருகிறது.

கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் வில்பத்து பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் மீள்குடியமர்த்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்கமையவே அவர்கள் மீண்டும் சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இங்கு மீள் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை நேரில் வந்து பார்த்த பின்னரே குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டும்.

அவ்வாறல்லாமல் ஒருமுக கண்ணோட்டத்தில் இதனை பார்ப்பதானது, இனவாதத்துக்கு இட்டுச் செல்லும். இந்த விடயம் தொடர்பில் அரசியல் தலைவர்கள் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

வில்பத்து வனப்பகுதியை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாட்டை முற்றாகத் தடுக்க சகலரும் ஒன்றிணைய வேண்டுமென, அவர் கோரிக்கை விடுத்தார்.

Latest Offers