அறிக்கைகளின்படி எலும்புக்கூடுகள் தொடர்பாக தீர்மானிக்கப்படும்! சட்டத்தரணி வி.எஸ்.நிறஞ்சன்

Report Print Ashik in சமூகம்

காபன் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு அறிக்கைகள் இன்னும் கிடைக்கப் பெறவுள்ள நிலையில் அதற்கான நினைவூட்டல் கடிதங்களை அனுப்பி அறிக்கைகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக காணாமலாக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றில் ஆஜராகும் சட்டத்தரணி வி.எஸ்.நிறஞ்சன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மனித புதைகுழி தொடர்பான கூட்டம் நேற்று மாலை மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டம் நிறைவடைந்த பின்னர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் புதைகுழி தொடர்பில் வெளியான அறிக்கையானது இடைக்கால அறிக்கை என்பதினால் இதனை வைத்து கொண்டு முடிவெடுக்க முடியாது என்பதன் அடிப்படையில், பல அறிக்கைகள் வர இருக்கின்றமையினால் அதற்கான நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பி எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் பேராசிரியர் ராஜ் சோம தேவ அவர்களின் அறிக்கையினை பெற்றுக்கொள்வதாகவும், இவ்விடயம் தொடர்பாக வைத்தியர்களின் அறிக்கைகளை அதாவது காயப்பட்டது எவ்வாறு?, இதில் என்ன நடை பெற்றுள்ளது? போன்ற அறிக்கைகளைப் பெற்றுக்கொண்டு, அனைத்து அறிக்கைகளையும் முழுமையாக வைத்துக் கொண்டு குறித்த நடவடிக்கையினை ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வருவதாகவும், அதனைத் தொடர்ந்து குறித்த மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புகளின் மாதிரிகளை மீண்டும் ஆய்வுக்கு அனுப்பி அதற்கான பதில்களை பெற்றுக் கொள்வதா? என கூடி முடிவு எடுக்கப்பட்டது.

எதிர்வரும் மூன்று மாதகாலத்தில் அதற்கான அறிக்கையினை பேராசிரியர் வழங்குவார். சான்றுகள் எதிர்வரும் ஒரு வார காலத்திற்கு பொலிஸாரின் பாதுகாப்பில் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிடைக்கப் பெறுகின்ற அறிக்கைகளை வைத்துக் கொண்டு மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும். சிறுவர்களுடைய எலும்புகள், அல்லது கைவிலங்கிடப்பட்ட எலும்புகள் மற்றும் குவியலாக கிடந்த எலும்புகள் போன்றவற்றில் இருந்து எடுக்க முடியுமா என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மன்னார் நீதவான் ரி.சரவணராஜா தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் உள்ளிட்ட ஆணையாளர்கள், சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ, போராசிரியர் ராஜ் சோம தேவ, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக வாதிடும் சட்டத்தரணிகள், காணாமலாக்கப்பட்ட உறவினர்களை தேடும் சங்க பிரதி நிதிகள், அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers