ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல்

Report Print Yathu in சமூகம்

உயிரிழந்த ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலும், நூல் அறிமுகமும் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இன்று இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

“ஜெனிவா மாயைகளும், உண்மைகளும்” எனும் தலைப்பில் அரசியல் ஆய்வுரையும் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதன்போது கரைச்சி பிரதேச சபையிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

காலத்திற்கு காலம் தொடர்ந்து இடம்பெற்ற யுத்த சூழ்நிலைகளால் பல்வேறுபட்ட பாதிப்புக்களை எதிர்கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்த சூழ்நிலைகளின் போதும் அதற்கு பின்னரான காலப்பகுதிகளில் ஊடகவியலாளர்களாகிய நாங்கள் பல்வேறுபட்ட அச்சுறுத்தல் இன்னல்களை எதிர்கொண்டு எமது பணிகளை முன்னெடுத்து வருகின்றோம் என்பது யாவரும் அறிந்தது.

மாவட்டத்தில் அர்ப்பணிப்புக்களுடன் பணியாற்றிய வேளை போரின் போது கொல்லப்பட்ட மற்றும் உயிரிழந்த ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்களை நினைவுகூரும் வகையில் கிளிநொச்சி நகரத்தில் கொல்லப்பட்ட மற்றும் உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கான நினைவிடம் ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

இந்த நிலையில் இந்த நினைவுத் தூபியினை அமைப்பதற்கான பொருத்தமான இடம் ஒன்றினை வழங்க உதவுவதற்கு கரைச்சிப் பிரதேச சபையிடம் நாங்கள் வினையமாக வேண்டி நிற்கின்றோம்.

எமது கோரிக்கைக்கு அமைவாக பொருத்தமான இடம் ஒன்றினை தெரிவு செய்து வழங்கி உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.