மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக நாடு திரும்பிய 155 இந்தோனேசிய தொழிலாளர்கள்

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்

மலேசியாவுக்கு சென்றால் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைக் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் அந்நாட்டுக்கு சென்ற 155 இந்தோனேசிய தொழிலாளர்கள், மோசமான அனுபவங்களுடன் மீண்டும் இந்தோனேசியாவுக்கே திரும்பியுள்ளனர்.

இவர்கள் சட்டவிரோதமான முறையில் படகு வழியாக டன்ஜூங் செங் குயாங்(Tanjungsengkuang) பகுதிக்கு வந்தடைந்த நிலையில் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.

மலேசியா, சிங்கப்பூர், வியாட்நாம் உள்ளிட்ட நாடுகளின் எல்லையோரம் உள்ள இந்தோனேசிய மாகாணமான ரியே தீவுகளில்(Riau Islands) டன்ஜூங் செங் குயாங் பகுதி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் உள்ள துறைமுகம் வழியாக படகு மூலம் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு சட்டரீதியிலான அனுமதி கிடையாது.

“நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுடன் இவர்களை சட்டவிரோதமாக கொண்டுசெல்ல ஈடுபட்டவர்களையும் கைது செய்துள்ளோம். மீட்கப்பட்ட 155 பேர்களில் 120 பேர் ஆண்கள் மற்றும் 32 பெண்களாவர்,” என உள்ளூர் காவல்துறை அதிகாரி ஆன்றி குர்னியாவன் தெரிவித்திருக்கிறார்.

மலேசியா மற்றும் இந்தோனேசியா இடையே உள்ள கடல் பகுதியை படகு வழியாக கடக்க முயற்சிக்கும் தொழிலாளர்கள் அல்லது அகதிகள் அவ்வப்போது கடலில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், சட்டவிரோதமாக தொழிலாளர்களை அனுப்பக்கூடிய சம்பவங்கள் பொதுவெளியில் கவனம் பெற்று வருவதன் தொடர்ச்சியாக, “இது மக்களின் பாதுகாப்புடன் தொடர்புடையது. ஏனெனில் இரே படகில் நூற்றுக்கணக்கானோர் கொண்டு வரப்பட்டுள்ளனர்” என இவ்வழக்கை விசாரிக்கும் அதிகாரி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தற்போது மீட்கப்பட்ட 155 தொழிலாளர்கள் மேடன், லம்போக், ஜாவா, பட்டாம் உள்ளிட்ட இந்தோனேசியாவின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers