நான் தான் அமைச்சர்... என்னை தவிர வேறு யாரும் வீடுகளை கட்ட முடியாது: திகாம்பரம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

நாடாளுமன்றத்தில், கறுப்பாகவும் கண்ணு சிவந்த நிலையில் தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவர் அமைச்சர் சஜித் பிரமேதாஸவிடம் சென்று 600 வீடுகளுக்கு கடன் விண்ணப்பங்களை கேட்டுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தால் கொத்மலை - எல்பொட தோட்டத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் கலந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மலையகத்தில் நான் நினைத்தால் மாத்திரமே வீடுகளை கட்டலாம். 2015ஆம் ஆண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மலையகத்தில் வீடு அமைப்பதற்காக மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சை எனக்கு பாரம் கொடுத்துள்ளார்.

இப்போது ஒன்றுமே செய்ய முடியாதமல் மக்கள் எங்களை தேடி வரும் இந்த நிலையில் நாம் முன்னெடுக்கும் அபிவிருத்தியை நிறுத்த பொய்யான தகவலாக 600 வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து சிலர் வலம் வருகின்றனர்.

இந்த வருடம் 3000 வீடுகள் எனக்கு கட்டியமைக்க வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் யாரும் பயப்பட வேண்டாம். தாத்தா சொன்ன பொய் போதும், அப்பா சொன்ன பொய் போதும், இப்போது பேரன் பொய் சொல்லி, கொள்ளு பேரனும் பொய் சொல்ல வந்துவிட்டார்.

இதற்கு இடம் கொடுக்க வேண்டாம். நான் இருக்கும் வரை எவருக்கும் பயப்படவும் வேண்டாம். நான் யாருக்கும் பயந்து போகும் ஆள் கிடையாது. உங்களுக்காக உங்களுக்குள்ள பிரச்சினையை எதிர்த்து போராடி உங்களுக்கு துரோகம் செய்யும் தலைவர்களை விரட்டியடிக்கவும் தயங்க மாட்டேன்.

நாம் பொறுமை காத்தது போதும், எதிர்காலத்தில் நமது சந்ததினருக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து செல்ல வேண்டும்.

இதை தெரிந்து கொண்டு இன்று மக்கள் மாற்றம் அடைந்து வரும் போது மீண்டும் ஒரு பொய்யை சொல்லி 1000 வீடுகள் வந்துள்ளன என சொல்லி திரிகின்றார்கள்.

இந்த 1000 வீட்டில் ஒரு வீட்டைக் கூட இங்கு கட்டியமைக்க முடியாது. அரசு எனக்கு தான் மலையகத்தில் வீடுகளை அமைக்க பொறுப்பு கொடுத்துள்ளது.

அதிகாரசபையும் எனக்கு கீழே தான் உள்ளது. நாமே வீடுகளை கட்டுவோம். நாம் இந்த அமைச்சை பெற்றே பின்பே மலையகத்தில் கிராமங்கள் உருவாகி வருகின்றது.

வேறு யாராவது வந்திருந்தால் மலையகத்திற்கு மாடி வீடுகளே கிடைத்திருக்கும். கூட்டணி சார்பாக சேவைகளை செய்து வருகின்றோம்.

ஆதரவு தாருங்கள் மலையகத்தில் லயன்களை உடைத்து தனி வீடுகளை அமைத்து கிராமங்களை உருவாக்குவோம். இந்திய அரசு வீடு கட்டும் நிதியை நன்கொடையாகவே கொடுக்கின்றது.

ஒரு வீட்டிற்கு 10 இலட்சம் ரூபா செலவு செய்யப்படுகின்றது. 4000 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டி முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த ஜீன், ஜீலையில் 10,000 வீடுகளுக்கான அடிக்கல் நாட்ட உள்ளோம்.

லயன் வீடுகளை உடைத்து தனி வீடுகளை அமைப்பது எமது அமைச்சும் அரசுக்கு முன்வைத்துள்ள கோரிக்கையாகவும் இருக்கின்றது. அந்த வகையில் இந்திய அரசுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

அத்துடன், தோட்ட பகுதிகளுக்கு தனி முகவரி தந்த இலங்கை அரசுக்கும் பிரதமருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers