நுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து! கர்ப்பிணித்தாயும் பலி

Report Print Thirumal Thirumal in சமூகம்

நுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பிணித் தாய் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

வலப்பனை, நுவரெலியா பிரதான வீதியில் மஹா ஊவாபத்தன, பகுதியில் தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

நுவரெலியாவிலிருந்து, நுவரெலியா - வலப்பனை வழியாக அம்பாறை நோக்கி பயணித்த தனியார் சுற்றுலா பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்களை உடனடியாக வலப்பனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அங்கிருந்து அனைவரும் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இதன்போது வலப்பனை வைத்தியசாலையில் வைத்து 28 வயது மதிக்கதக்க அம்பாறை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இதேவேளை, நுவரெலியா வைத்தியசாலையில் வைத்து கர்ப்பணி தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் கவலைக்கிடமாக இருந்த சிலர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பாரிய வளைவு பகுதியில் பேருந்தை செலுத்த முடியாததன் காரணமாகவே, இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் சிறுவர்களும் அடங்குவதோடு, சிலர் நுவரெலியா ஆதார வைத்தியசாலையிலும், சிலர் கண்டி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் நுவரெலியா மற்றும் வலப்பனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் வலப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers