தேசிய ரீதியிலான கணித போட்டியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு தங்கப்பதக்கம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, சூடுவெந்தபுலவு அல் இக்பால் மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் தேசிய ரீதியிலான கணித வினா விடை போட்டியில் முதலாமிடத்தை பெற்றுள்ளார்.

குறித்த பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்கும் முகமது சாஜகான் முகமது சகீர் என்பவரே இவ்வாறு முதலாமிடம் பெற்று கொண்டுள்ளார்.

இம் மாணவனுக்குரிய தங்கப்பதக்கம், வெற்றிக் கிண்ணம் மற்றும் சான்றிதழ்களை அல் இக்பால் மகாவித்தியாலய அதிபர் ஏ.கே.உபைத் இன்று வழங்கி வைத்துள்ளார்.

மாணவர்களின் கணித அறிவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் தேசிய மட்டத்தில் இப்போட்டி அல் ஹிக்மா மற்றும் பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்ஜின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.

இதில் முதல் இருபது இடங்களுக்குள் வவுனியா தெற்கு வலயத்தைச் சேர்ந்த மூவர் தெரிவாகியுள்ளனர்.

இப் போட்டியில், இரண்டாம் இடத்தை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த வரதராஜா தயாரதன் என்ற மாணவனும், 17ஆவது இடத்தை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜே.ஜனுராஜ் என்ற மாணவனும் பெற்றுள்ளனர்.

இப் போட்டியில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் இருந்து மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.