திருமலையில் பாடசாலை சீருடையுடன் சிறுமியை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற சாரதி கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - அனுராதபுர சந்தியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவியொருவரை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற முச்சக்கர வண்டி சாரதியை பிரதேச வாசிகள் பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை - மட்கோ, மஹாமாயபுர பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

திருகோணமலை மிக்சு சீமெந்து தொழிற்சாலையில் வேலை செய்து வரும் இவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டில் முற்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு வேலைக்கு சென்று வருவதாகவு‌ம் அதேசமயம் சிறுமியின் பெற்றோர்கள் வறுமையில் வாழ்வதை அவதானித்த இந்நபர் சிறு சிறு உதவிகளை செய்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இன்று காலை பாடசாலை சென்ற மாணவியை வீட்டாருடன் அன்பாக பழகிய முச்சக்கர வண்டி சாரதி அலஸ்தோட்டம் - துவரங்காடு பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்குள் பாடசாலை சீருடையுடன் அழைத்து சென்றுள்ளார்.

இதனை பார்வையிட்ட பிரதேச மக்கள் முச்சக்கர வண்டி சாரதியை பிடித்து தாக்குதல் நடாத்தியதுடன் உப்புவெளி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அத்துடன் குறித்த சிறுமியை உப்புவெளி பொலிஸார் விசாரணை செய்து வருவதுடன், திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் பரிசோதனைக்காக உட்படுத்த உள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 37 வயதுடைய சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் உறவினர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தந்தையரை பயமுறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.