யாழில் சொந்த வீடின்றி நிர்க்கதியாகியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது

Report Print Mohan Mohan in சமூகம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 27,261 குடும்பங்கள் சொந்த வீடின்றி நிர்க்கதியாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எழுப்பிய கேள்விக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகம் பதில் வழங்கியுள்ளது.

2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களிலிருந்து இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற வவுனியா வடக்கு, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்ததுடன் பின்னர் கட்டம் கட்டமாக தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளதுடன் இன்று வரை தங்களை தமது சொந்த இடங்களில் மீள குடியேற்றுமாறு போராடி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் 2010 /2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 34,391 குடும்பங்களைச் சேர்ந்த 19678 பேர் மீள குடியேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மீள்குடியேறியவர்களில் 2009/ 2018 வரையான காலப்பகுதியில் 19,508 குடும்பங்களுக்கு மாத்திரமே வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை 2018 ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் மாத்திரமே வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டதாகவும் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு 2018 ஆம் ஆண்டு வீடமைப்புத் திட்டத்தின் பொருட்டு எந்தவொரு ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை எனவும் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

வழங்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் 2009 /2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரச சார்பற்ற நிறுவனங்களால் 4007 வீடுகளும், தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 3795 வீடுகளும், இந்திய வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக 6,266 வீடுகளும் மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக 5,440 வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

இவை தவிர, 27,261 வீடுகள் வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும், இவற்றில் 52 சிறுவர் தலைமைத்துவ குடும்பங்கள், 233 போரினால் பெண் தலைமைத்துவம் வகிக்கும் குடும்பங்கள், 3,255 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், 911 மாற்றுவலுவுடையோரை அங்கத்தவர்களாகக் கொண்ட குடும்பங்கள், 417 புனர்வாழ்வளிக்கப்பட்டோரை அங்கத்தவர்களாகக் கொண்ட குடும்பங்கள், 297 காணாமல் ஆக்கப்பட்டவர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட குடும்பங்கள், 6,659 வயது முதிர்ந்த போரினால் வீடுகளை இழந்த குடும்பங்கள், 420 இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய குடும்பங்கள், 20,017 போரினால் உள்ளுரில் இடம்பெயர்ந்து வறுமையில் வாழும் குடும்பங்கள் என வீடுகளின்றி நிர்க்கதியான நிலையில் வசிப்பதாகவும் இவர்களுக்கு உடனடியாக வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Latest Offers