கிழக்கில் 811 தொண்டராசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கு அமைச்சரவை அனுமதி

Report Print Mubarak in சமூகம்

கிழக்கு மாகாணத்தில் 811 தொண்டராசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்து கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில் மேலும்,

2016.12.06ஆம் திகதி 445 தொண்டராசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்து கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றது.

அதன்பின் கிழக்கு மாகாணத்தில் உள்ள தொண்டராசிரியர்களின் விபரங்களை நாம் மாகாணசபையிடம் கோரியதுக்கு அமைவாக அவர்களால் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு அதில் தெரிவு செய்யப்பட்ட 456 பேரின் பெயர் விபரங்கள் அவர்களின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

ஆனால் மாகாணசபையால் எமக்கு நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியலை அனுப்பாமல் வேறு ஒரு பட்டியலே அனுப்பப்பட்டதால் அந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு இறுதி நேர்முகத்தேர்வுக்கான கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இதனால் ஏற்பட்ட குழப்ப நிலையை தீர்த்து மாகாணசபையால் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் இறுதி நேர்முகத்தேர்வுக்கான

கடிதம் கிடைக்கப்பெற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் இணைத்துக்கொள்ளப்படவேண்டிய தொண்டராசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி

நான் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய 811 தொண்டாரசிரியர்களை இணைத்து கொள்வதற்கான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கபட்டது.

இந்த அமைச்சரவை பத்திரத்துக்கான அமைச்சரவை அனுமதி தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. விரைவில் இறுதி நேர்முகத்தேர்வுக்கான கடிதங்கள் தொண்டராசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.