வெளிமாவட்ட மீனவர்களின் வருகையினால் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - செம்மலை கிழக்கு, நாயாறு கிராமத்தில் கடற்தொழிலை வாழ்வாதாரமாக நம்பி 96 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் 162 வெளிமாவட்ட மீனவர்களுக்கு இவ்வருடம் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் நாயாற்று கிராமத்தில் வசிக்கும் நிரந்தர மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் நாயாறு கிராமிய கடற்றொலில் அமைப்பின் தலைவர் கருத்து தெரிவிக்கையில்,

இவ்வருடம் நாயாற்று பகுதியில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கு 162 மீன்பிடிப் படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெளிமாவட்ட மீனவர்களுக்கு மேலும் அனுமதி வழங்குவதினால் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்தும்படி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் சென்ற வருடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.

நீரியல் வளதிணைக்கள அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தோம். இவ்வாறு கலந்துரையாடியபோது மேலும் அனுமதி வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இவ்வருடம் அதிகளவிலான வெளிமாவட்ட மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சென்ற வருடம் வெளிமாவட்ட மீனவர்களின் வருகை அதிகரித்திருந்தமையினால் ஆழ்கடலில் சட்டவிரோத வலைகள் மற்றும் லைட்கோஸ் என்பன பயன்படுத்தப்பட்டு கடற்தொழில் மேற்கொள்ளப்பட்டது.

இதனால் எமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாருடம் 162 வெளிமாவட்ட மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.