மட்டக்களப்பில் சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க புதிய திட்டம்

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மட்டு முயற்சியாண்மை - 2019 எனும் தொனிப்பொருளில் கண்காட்சி நடைபெறவுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இந்த கண்காட்சி மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் எதிர்வரும் ஏப்ரல் 18, 19 மற்றும் 20ஆம் திகதிகளில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படவுள்ளது.

மாவட்ட அரச அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெறும் இக்கண்காட்சியில் 14 பிரதேச பிரிவுகளிலும் உள்ள சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களின் தயாரிப்பு கைவினை பொருட்கள், உணவு உற்பத்திகள், பனையோலை, கைத்தறி உற்பத்தி பொருட்கள், மட்பாண்ட உற்பத்திகள், சிற்பங்கள் மற்றும் பாதணிகள் என பல்வேறு உற்பத்தி பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட உள்ளன.

மாவட்டத்தில் காணப்படுகின்ற சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களை ஊக்குவிற்பதற்கும் அவர்களின் உற்பத்தி பொருட்களை விளம்பரப்படுத்துவதற்கும் எமது மாவட்டத்தின் வறிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் அவர்களுக்கான ஒரு சந்தைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனூடாக மாவட்டத்தின் சிறிய நடுத்தர முயற்சியாளர்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துவதும், வறிய குடும்பங்களின் பொருளாதாரத்தை விருத்தி செய்வதும் தன்னிறைவான சமூக கட்டமைப்பை உருவாக்குவதும் பிரதான நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளார்.