மண்ணின் வளங்களைக் காப்பாற்றும் மாணவர்கள் பசுமைக் காவலர்கள்

Report Print Sumi in சமூகம்

மண்ணின் வளங்களைக் காப்பாற்றுகின்ற மாணவர்கள் பசுமைக் காவலர்கள் என வடமாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

யாழ். சிறுப்பிட்டி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட இலுப்பை மரக்கன்றுகளை தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்திடம் வழங்கும் நிகழ்வு, பாடசாலையின் அதிபர் த.யுகேஸ் தலைமையில் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மண்ணின் எல்லைகளைக் காப்பாற்றப் போராடிய மறவர்களை விடுதலைப் போராளிகள் என்று கொண்டாடுகின்றோம். அதே போன்று தான் மண்ணின் வளங்களைக் காப்பாற்றுகின்ற மாணவர்களும் போற்றப்பட வேண்டியவர்கள். இவர்கள் விடுதலைப் போராளிகளுக்கு நிகரான பசுமைக் காவலர்கள்.

பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து அவற்றில் மரநடுகையை மேற்கொள்ளும் அமைப்பொன்றிடம் கையளிக்கும் மாணவர்களின் செயல் சாதாரணமான ஒன்றல்ல.

இச்செயற்திட்டம் ஏனைய பாடசாலை மாணவர்களும் பின்பற்ற வேண்டிய, முன்மாதிரியான ஒரு செயற்பாடாகும். வீணேபொழுதைக் கழிக்கும் மாணவர்களின் மத்தியில் சூழற்குரிய இந்தச் செயலைச் செய்யும் மாணவர்கள் பாராட்டத் தகுந்தவர்கள்.

எமது சுற்றுச் சூழல் இன்று மிகமோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றது. மரங்களை அழிப்பதாலும், வாகனங்களிலிருந்து புகைக் காற்றை அதிகளவில் வெளியேற்றுவதாலும் பூமி சூடேறிக் கொண்டிருக்கின்றது.

இதனால் காலநிலையில் பாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. விவசாய இரசாயனங்களால் நீரும் நிலமும் நஞ்சாகிக் கொண்டிருக்கின்றது.

உக்காத பிளாஸ்டிக்கும்,பொலித்தீனும் மண்ணை மூச்சுத்திணற வைத்துச் சாகடித்துக் கொண்டிருக்கின்றது. இவற்றால் மனிதர்களாகிய நாமும் பாதி ஆயுளிலேயே சாவினைத் தழுவிக் கொண்டிருக்கின்றோம்.

இயற்கையைப் பாதுகாத்தால் மாத்திரமே எதிர்கால சந்ததி இந்தப் பூமியில் நிம்மதியாகவும்,ஆரோக்கியமாகவும் வாழமுடியும்.

அந்தவகையில் இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மனதில் இருத்திச் செயற்படும் இந்த மாணவர்களைப் பசுமைக்காவலர்கள் என்று சொன்னால் மிகையேதும் இல்லை.

இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து எமது மண்ணை மீட்பதற்காகப் போராடிய போராளிகள் இந்த மண்ணில் எமது மக்கள் வாழ வேண்டும் என்ற நினைப்புடனேயே போராடினார்கள்.

இந்த மண்ணில் நாங்கள் வாழ வேண்டுமானால் மண்ணின் சகல வளங்களும் காப்பாற்றப்பட வேண்டும்.

அதனாலேயே, மண்ணின் வளங்களைக் காப்பாற்ற முனையும் இந்த மாணவர்களைப் பசுமைக் காவலர்கள் என்றும், விடுதலைப் போராளிகளுக்கு நிகரானவர்கள் என்றும் குறிப்பிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.