கனேடிய தூதுவர் மற்றும் உப்புவெளி பிரதேச சபை தவிசாளருக்குமிடையில் சந்திப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

இலங்கைக்கான கனேடிய தூதுவருக்கும் - திருகோணமலை உப்புவெளி பிரதேச சபையின் தவிசாளருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான கனேடிய தூதுவர் CLAUDE GOULET கிலோடி கோல்ட்டுக்கும், உப்புவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஞான குணாளனுக்குமிடையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பின் போது உப்புவெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும், இன்னும் இப்பகுதியில் காணப்படும் குறைபாடுகள் பற்றி வட்டாரங்கள் ஊடாக சென்று கேட்டறிந்துள்ளதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும் கனேடிய அரசின் ஊடாக இரு மொழிக் கொள்கையை அமுலாக்குவது பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை உப்புவெளி பிரதேச சபையின் தவிசாளர் கனேடிய தூதுவரிடம் மூன்று விடயங்களை மிக விரைவில் செய்து தருமாறும் அதில் சிங்களம் அல்லது தமிழ் மொழியை ஊழியர்கள் கற்பதற்குறிய உதவிகளை செய்து தருமாறும், சபை அமர்வுகளின் போது நேரடி மொழிபெயர்ப்பு செய்யக்கூடிய வசதிகளை ஏற்படுத்தி தருமாறும், உப்புவெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெயர்ப்பலகைகளை மூன்று மொழிகளிலும் போடுவதற்குறிய நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறும் இதன்போது ஞான குணாளன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து கனேடிய அரசின் நிதியுதவியுடன் ஆலோசனைகளை பெற்று அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் இலங்கைக்கான கனேடிய தூதுவர் கிலோடி கோல்ட் தெரிவித்துள்ளார்.