வடமாகாண ஆளுநரிற்கு பெறப்பட்ட உணவு பொதியில் காத்திருந்த பயங்கரம்

Report Print Yathu in சமூகம்

வடமாகாண ஆளுநரின் மக்கள் சந்திப்பின் போது பெறப்பட்ட உணவில் புளு காணப்பட்டுள்ளமை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் நேற்று வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் தலைமையில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் உணவகம் ஒன்றிலிருந்து பெறப்பட்ட உணவு பொதியில் புளு காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வடமாகாண ஆளுநர் சுகாதார பரிசோதகர்களிற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நேற்று உத்தரவிட்டுள்ளார்.

குறித்த உத்தரவிற்கமைய குறிப்பிடப்பட்ட தனியார் உணவகம் மீது கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன், வழக்கில் 2 நாட்கள் கடையினை மூடி சுத்தம் செய்யுமாறு நீதிமன்றினால் பணிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டளையை மீறி குறித்த உணவகம் தொடர்ந்து திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று கொண்டிருந்தமை தொடர்பில் ஆளுநருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு இரவு 10 மணியளவில் சென்ற ஆளுநர், அங்கிருந்த அதிகாரிகளை சுகாதாரமற்ற உணவுகள் வழங்கப்படுகின்றமை தொடர்பில் கடுமையாக சாடியுள்ளதோடு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த ஆளுநர்,

உணவகம் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்ட சுகாதார பரிசோதகர் தனது கையடக்க தொலைபேசியை இயக்காது யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளதாக அவரது உயரதிகாரி குறிப்பிட்டார். இவ்வாறு செயற்படுவது தொடர்பில் ஆளுநர் விசனம் தெரிவித்துள்ளார்.

சுகாதாரமற்ற உணவுகள் தொடர்பில் ஊடகங்களின் ஊடாக மக்கள் நிலைமையை வெளி கொண்டுவர முன்வர வேண்டும் எனவும், இவ்வாறான சுகாதாரமற்ற உணவகங்கள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க முற்பட்ட சமயம் தனக்கே இவ்வாறான உணவு கிடைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் 24 மணிநேரத்திற்குள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.