பதவியை இராஜினாமா செய்துள்ள காத்தான்குடி நகர சபையின் உறுப்பினர்

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு, காத்தான்குடி நகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பான உறுப்பினர் ஏ.எம்.எம்.மாஹிர் தனது பதவியை நேற்று இராஜினாமா செய்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஏ.எம்.எம்.மாஹிர் கட்சிக்கும் அதன் தலைமைக்கும் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக ஒரு வருட சுழற்சிமுறையில் தனது நகரசபை உறுப்பினர் பதவியை நேற்று அவர் இராஜினாமா செய்துள்ளார்.

மட்டக்களப்பு, தெரிவத்தாச்சி அலுவலகத்தின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் தில்லை வாசனிடம் அவர் தனது இராஜினாமா கடிதத்தினை கையளித்துள்ளார்.

இதன் போது இராஜாங்க அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளருமாகிய எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் இணைப்பாளர்களான எச்.எல்.எம்.கலீல் மற்றும் எம்.எஸ்.எம்.றிஸ்மின் ஆகியோர் சமுகமளித்திருந்தனர்.

கடந்த உள்ளூராட்சி தேர்தலின் போது விகிதாசார அடிப்படையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைக்கப்பெற்ற நிலையில் அது ஒரு வருடத்திற்கு ஒருவருக்கு சுழற்சி முறையில் வழங்கப்படுவது என்ற அடிப்படையில் முதலாவதாக ஏ.எம்.எம்.மாஹிருக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.