பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு இரண்டு ஏக்கர் காணி பெற்றுக்கொடுக்க ஏகமனதாக தீர்மானம்

Report Print Thiru in சமூகம்

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு இரண்டு ஏக்கர் காணியை பெற்றுக்கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று நாடாளுமன்ற கட்டட தொகுதியில் குழு அறை இரண்டில் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களான கயந்த கருணாதிலக, வேலுசாமி இராதாகிருஸ்ணன், இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜித் பெரேரா, கே.கே.பியதாச, வேலுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்திக்காக இரண்டு ஏக்கர் காணி பெற்று கொடுக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

மிக விரைவாக இந்த காணிகளை வழங்குவதற்காக கல்வி அமைச்சு, காணி அமைச்சு, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சு, பெருந்தோட்ட கம்பனிகள் ஆகியன உள்ளடங்கும் வகையில் குழு ஒன்றை அமைப்பதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை மேலும் விரைவுபடுத்தும் முகமாக நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பாக அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனும், ஊவா மாகாணத்திற்கு பொறுப்பாக இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸும், சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேராவும், கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு பொறுப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் அளவில் காணிகளை தேசிய நிகழ்வு ஒன்றின் மூலமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கையளிப்பது என தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.