திருகோணமலையில் நல்லிணக்க சூழலை குழப்ப முயற்சி! சுவிஸ் அரசிடம் முறைப்பாடு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலையில் நல்லிணக்க சூழலை மாவட்டத்திற்கு வெளியில் உள்ளவர்கள் வந்து குழப்ப முயற்சிப்பதாக முறையிடப்பட்டுள்ளது.

சர்வோதய நிலையத்தில் இன்று சுவிஸ் நாட்டிற்கான தூதுவருடன் இடம்பெற்ற சந்திப்பில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிவில் சமூகத்தின் சார்பில் கருத்து வெளியிட்ட பொது நிறுவனங்களின் ஒன்றியத் தலைவர் பொறியிலாளர் டி.தவசிலிங்கம் இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்திற்கு சுவிஸ் நாட்டின் தூதுவர் பீற்றர் மார்க்ஸ் விஜயம் செய்து தற்போதைய நிலமைகள் மற்றும் அந்நாட்டின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் பற்றி ஆராய்ந்தார்.

இதன்போது சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் தமிழ், சிங்களம் எனத்தனித்தனியாக சர்வோதய நிலையத்தில் காலை சந்தித்து கலந்துரையாடினார்.

உதாரணமாக அண்மையில் திருகோணமலை நகரில் ஒரு சமயத்துறவியின் சடலம் இறுதிக்கிரிகைகள் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இங்கு மாணவர்கள் இளைஞர்கள் பாவிக்கின்ற மைதானமாகவுள்ளது. இவரது உடல் சீனக்குடாவில் இருந்து நகரத்திற்கு கொண்டு வரப்பட்டு இவ்வாறான காரியம் செய்யப்பட்டது.

கடந்த காலத்தில் இருந்து பல பாதிப்பிற்கும் கசப்புணர்விற்கும் மத்தியில் வாழும் மக்கள் மத்தியில் இவ்வாறான செயற்பாடு நல்லிணக்கத்தை கொண்டு வரப்போவதில்லை மாறாக தவறான எண்ணக்கருவையே கொண்டு வரும்.

இதனை ஏனைய மதத்தைச்சார்ந்தவர்களும் செய்ய முற்பட்டால் இங்கு முரண்பாடு ஏற்படும்.

மூவின மக்களும் அமைதியாக வாழும் பகுதியில் இது போன்ற நடவடிக்கைகள் கசப்புணர்வையே தோற்றுவிக்கும் இவ்வாறு பல நடவடிக்கைகளை வெளியில் இருந்து வருபவர்களே மேற்கொள்கின்றனர்.

இதனால் மாவட்டத்தில் தேவையற்ற பதற்ற நிலமைகள் ஏற்படுகின்றன எனவும் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நிலமைகளால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களே மேலும் பாதிக்கப்படுகின்றனர். நிலைமாறு கால நீதி தொடர்பாக பல உறுதி மொழிகள் அரசு முன்வைத்தாலும் செயற்பாடு மந்த கதியிலேயே நடைபெறுகின்றது.

அவற்றை நடைமுறைப்படுத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நலனும் நம்பிக்கையும் மேம்படும் ஆனால் அதற்கு வழி ஏற்படுவதாக இல்லை.

அரசின் பல திணைக்களங்கள் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் குழப்ப நிலமைகளை ஏற்படுத்துகின்றன. அவற்றின் செயற்பாடுகள் நல்லிணக்கத்திற்கு முற்றிலும் மாறுபட்ட நிலமையையே ஏற்படுத்தி வருகின்றன.

பாதிக்கப்பட்ட பெண்களின் கோரிக்கைகள் நலன்கள் தொடர்ந்தும் கருத்தில் கொள்ளப்படுவதாக இல்லை. இதனால் பெண்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.

மாவட்டத்தின் கனிய வளங்கள் மாவட்டத்திற்கு வெளியில் அரசியல் செல்வாக்குடன் அள்ளிச் செல்லப்படுகின்றன.

இவ்வாறு பல்வேறு நிலைமைகள் சட்டத்திற்குமுரணாக தொடருகின்றன. தென்னமரவாடி, புல்மோட்டை போன்ற இடங்களில் மக்களின் காணிகள் பிணக்குகள் தொடருகின்றன.

இவை வெளியாரின் தலையீட்டால் அத்துமீறல்களால் தான் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் பலரும் சுட்டிக்காட்டினர்.

Latest Offers