இலங்கையின் முதல்தர மாநகர சபையாக மட்டக்களப்பு மாநகரசபையினை மாற்ற நடவடிக்கை

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாநகரசபையினை இலங்கையின் முதல் தர மாநகர சபையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபையினை பெண்கள் சிநேக நகராக மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், சிறுவர்கள் சிநேக நகராகவும் மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் எந்த மாநகரசபையிலும் இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட ஐந்தாம் வட்டார பகுதிகளில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் மக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான கலந்துரையாடல் இன்று காலை நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் வட்டாரங்கள் தோறும் மக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு நகருக்குள் வரும் பெண்கள் பாதுகாப்பினை உணரும் வகையிலான நடவடிக்கைகளை மாநகரசபை மேற்கொண்டு வருகின்றது.

அதன் முதற்கட்டமாக மட்டக்களப்பு நகருக்குள் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.பெண்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பெண்கள் சினேக நகரம் என்ற திட்டம் ஒன்றிணை உருவாக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அதேபோன்று சிறுவர் சினேக நகர் என்ற திட்டமும் உருவாக்கப்படவுள்ளது.

சிறுவர் சினேக நகர் உருவாக்கத்திற்கு உதவ யுனிசேவ் உறுதியளித்துள்ளது.அதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் முதலாவது பெண்கள்,சிறுவர்கள் சினேக நகராக மட்டக்களப்பு மாநகரசபை மாற்றம் பெறப்போகின்றது.எங்களுக்கு அடுத்த படியாகவே கொழும்பு மாநகரசபை பெண்கள் சினேக நகருக்கு கைச்சாத்திடப்போகின்றது.

மட்டக்களப்பு மாநகரசபை இலங்கையில் முதல்தர மாநகரசபையாக மாற்றம் பெறுவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.அதன் அடிப்படையிலேயே மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவுத்திட்டம் ஒரு முதல்தர வரவு செலவுத் திட்டமாக வரையப்பட்டது.

எங்களது மொத்த வரவு செலவுத்திட்டத்தில் ஐம்பது வீதம் மாநகரசபையின் சொந்த வருமானத்தில் இருந்தே பெறப்பட்டுள்ளது.இலங்கையில் எந்த வரவு செலவுத்திட்டத்திடமும் இவ்வாறு இல்லை.அந்த ஐம்பது வீததத்தில் ஐம்பது வீதம் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படுகின்றது.

மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமையளித்து மாநகரசபையின் செலவுகளை குறைத்து வேலைகளை முன்னெடுத்துவருகின்றோம்.

இதேபோன்று தான் தனியார் கல்வி நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டு ஒரு இறுக்கமான நிலையினை கடைப்பிடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.பல தனியார் கல்வி நிலையங்கள் மாணவர்கள் கற்றக முடியாத நிலையில் இருக்கின்றது.

எமது கல்வி நிலை மிக மோசமான நிலைக்கு செல்வதற்கு இந்த தனியார் கல்வி நிலையங்களும் முக்கிய காரணமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers