போதைப்பொருளற்ற எதிர்கால சமூகத்தை உருவாக்கும் பொறுப்பு தற்கால கல்விச் சமூகத்திடம் உள்ளது

Report Print Rusath in சமூகம்

போதைப்பொருளற்ற எதிர்கால சமூகத்தை உருவாக்கும் பாரிய பொறுப்பு தற்கால கல்விச் சமூகத்திடம் இருப்பதாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ். உமர்மௌலானா தெரிவித்துள்ளார்.

போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான 'சித்திரைப் புதுவருட உறுதியுரை' நிகழ்வு இன்று மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிமனையில் நடைபெற்றுள்ளது.

அங்கு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணம் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் பின் தள்ளப்பட்டுள்ள நிலையில் போதைப்பொருள் பாவனையில் முன்னணி வகிப்பதை வேதனையுடன் நோக்க வேண்டியுள்ளது.

எமது நாட்டில் மாவட்டங்கள் தோறும் சனத்தொகைக்கேற்பவே மதுபான சாலைகளை நிறுவுவதற்கான அனுமதி வழங்கப்படுவதுண்டு.

அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் அறுபது மதுசாலைகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருபது மதுபான சாலைகளுமே சட்டரீதியில் இயங்க முடியும். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் அறுபது மதுசார சாலைகள் உள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அபிவிருத்திப்பணிகளுக்காக மாதாந்தம் சராசரியாக 36 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

ஆனால் இம்மாவட்டத்திலிருந்து மதுபான சாலைகள் மூலமாக அரசாங்கத்திற்கு மாதாந்தம் நாற்பது கோடி ரூபாய் வருமானமாகக் கிடைப்பதாக தகவல்கள் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

மதுபாவனையில் நுவரெலியா, யாழ்ப்பாணத்திற்கு அடுத்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகிறது.

அண்மைக்காலமாக மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகிரித்துள்ளது. இந்நிலையில் கல்விச் சமூகத்திற்கு பாரிய பொறுப்புக்கள் உள்ளன.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள சுமார் நாற்பதாயிரம் மாணவர்களையும், இரண்டாயிரம் ஊழியர்களையும் பொறுப்பேற்று பாதுகாக்கும் பொறுப்பு எம்மிடம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers