விவசாய நடவடிக்கைக்கு இடையூறு விளைவிக்கும் வனவள பாதுகாப்பு திணைக்களம்

Report Print Ashik in சமூகம்
49Shares

கிளிநொச்சி - பூநகரி, ஜெயபுரம் பகுதி மக்களின் விவசாய காணிகளை சுத்தம் செய்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வனவள பாதுகாப்பு திணைக்களம் தொடர்ச்சியாக இடையூறு விளைவிப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

விவசாய காணி தொடர்பாக எமது செய்தியாளர் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேற்று பிற்பகல் தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,

2010ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற நிலையில் ஜெயபுரம் பகுதியில் மக்கள் மீண்டும் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர் விவசாய நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணிகளை சுத்தம் செய்வதற்கு முற்பட்ட போது கண்ணிவெடிகள் காணப்படுவதனால் காணிகளை வழங்க முடியாது என இராணுவம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து காணிகளை சுத்தம் செய்யும் பணிகளை மக்கள் இடை நிறுத்தியிருந்தனர்.

அதன் பின்னர் கண்ணிவெடிகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு காணிகள் அனைத்தும் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

இதனை அடுத்து கடந்த வருடம் மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி அமைச்சர் சுவாமிநாதனால் குறித்த காணிகள் அனைத்தும் சுத்தம் செய்வதற்காக 20 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், குறித்த நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டிருந்ததுடன், காணியானது வனவள திணைக்களத்தின் எல்லைக்குள் காணப்படுவதாகவும் எனவே காணியை சுத்தப்படுத்தவோ விவசாய நடவடிக்கைகளுக்காகவோ பயன்படுத்த முடியாது எனவும் வனவள திணைக்கள அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து விவசாய செயற்பாடுகளுக்காக வழங்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வனவள திணைக்களம் இடையூறாக இருப்பதாகவும், எனவே குறித்த காணிகளை தமக்கு பெற்று தர கோரி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் உட்பட்ட பல்வேறு அரச தரப்பினருக்கு மகஜர் அடங்கிய கோரிக்கை கடிதங்களை மக்கள் வழங்கி வைத்துள்ளனர்.

இருப்பினும், தற்போது குறித்த மக்களுக்கு சொந்தமான காணிகளில் வனவள திணைக்கள அதிகாரிகளின் அனுமதியுடன் வேறு பிரதேச மக்கள் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

எனவே ஒருதலைபட்சமாக வனவள திணைக்களம் நடந்து கொள்வதாகவும் தங்களுக்கு உரிய காணிகளை விரைவில் பெற்று தருமாறும் ஜெயபுர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் குறித்த மக்களின் காணிகள் வழங்கும் விடயத்தில் அரச திணைக்களங்கள் விரைவில் நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் யாழ். பிராந்திய அலுவலகத்தில் ஜெயபுர மக்கள் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.