இலங்கை மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை

Report Print Gokulan Gokulan in சமூகம்
96Shares

அம்பத்தளே சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் எதிர்வரும் மே மாதம் வரையில் தடங்கலின்றி நீரை விநியோகிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தளே சுத்திகரிப்பு நிலைய மேலதிகாரி பியல் ராஜபக்ஷ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், களுகங்கையின் நீர்மட்டம் கணிசமான அளவு குறைவடைந்து உள்ளமையால் உவர் நீர் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனினும் இதனை தடுப்பதற்காக மண்மூடைகள் மூலம் அணைகள் அமைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் தாழ் நில பிரதேசங்களில் குடிநீர் விநியோகம் முறையாக இடம்பெற்றாலும் உயரமான இடங்களுக்கு நீரை விநியோகிப்பதில் பிரச்சினைகள் உள்ளன.

ஆனால், கொழும்பு உட்பட அதனை அண்மித்த பகுதிகளிலும் நீர்வெட்டு அமுலாக்கப்பட மாட்டாது.

களுகங்கையின் தாழ்நில பிரதேசங்களில் நேற்று முன் தினம் தொடக்கம் கடல் நீர் கலக்கிறமையால் சில இடங்களில் பௌசர்கள் மூலம் நீர் விநியோகிக்கப்படுகின்றது.

இதேவேளை களுகங்கையிலிருந்து நீர் விநியோகிக்கப்படும் பிரதேசங்களில் பிரச்சினையில்லை என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தெற்கிற்குப் பொறுப்பான பிரதிப் பொது முகாமையாளர் கிரிஷான் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.