அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக ஏமாற்றிய இந்திய முகவர்!

Report Print Murali Murali in சமூகம்

அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக 1.15 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய முகவர் நிலையம் மீது சண்டிகர் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

உள்ளூர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இவ்வழக்கு பதியப்பட்டுள்ளது. முன்னதாக, ஹர்ஜீத் சிங் என்றவர் இவ்விவாகரம் தொடர்பாக மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

அதில், மார்ச் 2017ல் சண்டிகரில் உள்ள குளோபல் எஜூகேஷன் மற்றும் கேரியர் என்ற பயண ஏற்பாட்டு அலுவலகத்தை அணுகி, அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான விசாவை பெற்றுத்தருமாறு கேட்டதாக குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு சம்மதித்த சாக்சி திர் என்ற முகவர், நிரந்தரமாக குடியேறுவதற்கான ஏற்பாட்டினை செய்ய 10 லட்சம் ரூபாயை பெறுவதாகவும் முன்தொகையாக ஒரு லட்சம் ரூபாயை வாங்குவதாகவும் குறிப்பிட்டதாக கூறியுள்ளார்.

அத்துடன், தனக்கு அவுஸ்திரேலியாவில் நல்ல தொடர்புகள் இருப்பதாக அந்த முகவர் தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து 1.15 ரூபாயுடன் கடவுச்சீட்டை அந்த முகவரிடம் கொடுத்திருக்கிறார் ஹர்ஜீத் சிங்.

சுமார் 8 முதல் 10 மாதங்களுக்குள் அவுஸ்திரேலிய பயணத்திற்கான ஏற்பாட்டை செய்வதாக முகவர் சொல்லியிருந்த நிலையில், எந்த பயண ஏற்பாடுகளையும் செய்யாததால் பணத்தை திரும்ப பெற ஹர்ஜீத் சிங் அந்த முகவரின் அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார்.

ஆனால், அலுவலகம் மூடப்பட்ட நிலையில் இருந்திருக்கின்றது. இந்த நிலையிலேயே ஹர்ஜீத் சிங் நீதிமன்றத்திடம் முறையிட்டுள்ளார்.

அதன் காரணமாக, இவ்விவகாரத்தில் தலையிட்ட நீதிமன்றம் வழக்கு பதியவும் உத்தரவிட்டிருக்கின்றது. சாக்சி என்ற அந்த முகவர் கோரிய முன் பிணையும் நிராகரிக்கப்பட்டிருக்கின்றது.