யாழ்.பிரபல இந்து ஆலயமொன்றில் நடந்துள்ள சம்பவம்! மூதாட்டியிடம் வசமாக சிக்கிய நபர்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

யாழில் மூதாட்டியை ஏமாற்றி மூன்று பவுண் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற சந்தேகநபர் மூதாட்டியால் அடையாளங்காணப்பட்ட நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.மட்டுவில் பன்றித் தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலயத்தில் கடந்த வாரம் மூன்றாம் பங்குனித் திங்கள் உற்சவம் நடைபெற்றுள்ளது.

இதன்போது மூதாட்டியின் மகன் விபத்தொன்றில் சிக்கி சாவகச்சேரி ஆதார வைத்தியாசாலையில் சிகிச்சைகளுக்காகச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவரது சிகிச்சைகளுக்காகப் பணம் தேவைப்படுவதாகவும் அங்கு நின்ற நபரொருவரால் மூதாட்டிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி தன்னிடம் பணம் எதுவுமில்லை எனத் தெரிவித்துத் தன் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுண் தங்கச் சங்கிலியைக் கழற்றிக் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து தங்கச் சங்கிலியை வாங்கிய அந்நபர் அங்கிருந்து வேகமாகச் சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தின் பின்னர் அங்கு வருகை தந்த மகன் நடந்த விடயங்களை அறிந்து மிகவும் மனம் வருந்தியுள்ளார்.

பின்னர் மூதாட்டியும், மகனும் அம்பாளிடம் மனம் நொந்து நேர்த்தி வைத்த பின்னர் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் பங்குனித் திங்கள் உற்சவத்தின் இறுதி நாள் மேற்படி ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இந்த உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக நேற்றைய தினமும் குறித்த மூதாட்டி தனது மகனை அழைத்துக் கொண்டு ஆலயம் சென்றுள்ளார். ஆலயத்தில் வழிபாடுகள் ஆற்றிக் கொண்டிருந்தனர்.

தங்கச் சங்கிலியை அபகரித்துக் கொண்டு சென்ற சந்தேகநபர் அங்கு நின்றுள்ளதை அவதானித்த மூதாட்டி இதுதொடர்பில் மகனிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து மூதாட்டியின் மகன் குறித்த நபரைக் கையும் மெய்யுமாகப் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் முற்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, சங்கிலியைப் பறிகொடுத்த மூதாட்டியும், மகனும் இதுதொடர்பில் மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் மீது நம்பிக்கை வைத்து, மனமார வைத்த நேர்த்தி வைத்ததாகவும் அந்த நேர்த்தி பலித்து விட்டதாகவும், தங்கச் சங்கிலியை ஏமாற்றி அபகரித்துச் சென்றவரை இதே ஆலயத்தில் வைத்து அடையாளம் காண உதவியது அம்பாளின் திருவருளே எனவும் தற்போது தகவல் பரவி வருகிறது.