யாழ். மாநகரசபை முன்றலில் அமைதிவழி போராட்டம்

Report Print Sumi in சமூகம்

யாழ். மாநகர மத்திய பேருந்து நிலையத்தை சூழ வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகள் தமக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அமைதிவழி போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபை முன்றலில் இந்தப் போராட்டம் இன்று காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர மத்திய பேருந்து நிலையம் நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நவீன முறையில் மேம்படுத்தப்படவுள்ளது.

அதனால் அதன் பணிகளை ஆரம்பிக்க உள்ள நிலையில் பேருந்து நிலையத்தை சூழ வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் 63 வியாபாரிகளை வரும் 30ஆம் திகதியுடன் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு யாழ். மாநகர சபை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் 63 வியாபாரிகளும் தமது வாழ்வாதாரத்தை கவனத்தில் எடுத்து மாற்று இடத்தை ஒதுக்கி தருமாறு கோரி அமைதிவழி போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர்.

தமது கோரிக்கையை யாழ். மாநகர முதல்வர் நிறைவேற்றும் வரை தமது போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.