பொது மக்களுக்கு ஓர் எச்சரிக்கை! வவுனியாவில் இரு சம்பவங்கள்

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் இன்று அதிகாலை சட்டவிரோதமாக இயங்கி வந்த தேன் உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டு உள்ளது.

இதன்போது வெளிமாவட்டங்களில் விற்பனை செய்ய எடுத்துச் செல்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 116 சீனி பாணி போத்தல்கள் சுகாதார அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொதுமக்கள் வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில் இவ்வாறு சட்டவிரோதமாக இயங்கி வந்த இந்த தேன் உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது 116 போத்தல்களில் அடைக்கப்பட்ட சீனிப்பாணி போத்தல்கள் தேன் என்று தெரிவித்து மலையக பகுதிகளில் விற்பனைக்காக எடுத்து செல்லப்படவிருந்தமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சந்தேகநபருக்கு எதிராக இன்றைய தினம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பில் சுகாதார பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,

உற்பத்தியாளரின் பெயர், விபரங்கள் திகதியிடப்பட்ட சுற்றுத்துண்டுகள் ஒழுங்கு முறைப்படி காணப்படாத எந்தவொரு தேன் போத்தலையும் அல்லது உணவுப் பொருளையும் மக்கள் கொள்வனவு செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் தேன் என்று தெரிவித்து சீனிப்பாணி விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறான சீனிப்பாணி போத்தல்கள் பல எங்களால் கைப்பற்றப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சுகாதாரமில்லாமல் பொலித்தீன் பையில் இட்டு மோட்டார்சைக்கிளில் விற்பனைக்கு எடுத்து செல்லப்பட்ட பாண் மற்றும் பனிஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் இன்று காலை மரக்காரம்பளை வீதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் குறித்த நபரின் பாண் பெட்டியை கைப்பற்றி திருத்த வேலைகள் மேற்கொள்வதற்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனையும் கருத்திற்கொள்ளாமல் சுகாதார விதிமுறைகளுக்கு உட்படாமல் உணவு பண்டங்களை தொடர்ந்தும் அவர் விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவருகிறது.