தென்னந் தோப்புக்குள் ஊடூருவிய காட்டு யானைகளால் பாரிய அழிவு

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு கிராமத்தில் உள்ள தென்னந்தோட்டம் ஒன்றிற்குள் ஊடருவிய காட்டு யானைகள் தென்னை பயிர்களை சேதம் செய்துள்ளது என விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

விவசாயக் கிராமத்திற்குள் நேற்றைய தினம் ஊடுருவிய காட்டுயானைகள் அங்குள்ள தொன்னந் தோப்பில் இருந்த சுமார் 36 தென்னை மரங்களை அழித்துதள்ளதாக அத்தோப்பின் உரிமையாளர் ஆனந்தி ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாகவும் கடந்த வருடம் தனது தோட்டத்திலிருந்த 20 தென்னை மரங்கள் காட்டு யானைகளால் அழிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

இதுபோன்று அடிக்கடி நிகழும் அழிவுகளால் தமது குடும்ப பொருளாதாரத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், நெடியமடு, உன்னிச்சை, ஆயித்தியமலை போன்ற பிரதேசங்களில் யானை தடுப்பு மின்சார வேலி இருந்த போதிலும் கடந்த பல மாதங்களாக அதற்கு மின்சரம் வழங்கப்படாமல் உள்ளது.

தமது விவசாய உற்பத்திகளையும் நெல் வயல்களையும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையிலே இரவு பகலாக கண் விழித்திருந்து பாதுகாத்து வருவதாகவும் கூறி இங்குள்ள விவசாயிகள் கவலை வெளியிட்டனர்.

அத்துடன் இடைநிறுத்தப்பட்டிருக்கும் மின்சார வேலிக்கான மின் இணைப்பினை விரைவாக வழங்கி கிராம விவசாயிகளின் உயிர்களையும் பயிர்களையும் பாதுகாத்து உதவ உரிய அதிகாரிகள் விரைவாக முன்வர வேண்டுமெனவும் கிராமத்தின் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.